Friday, 28 September 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி





ம.தி.மு.கவின் கொள்க விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத்துடனான இந்த நேர்காணல் நடந்தது சென்ற ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த சில நாட்களுக்கு முன்பு. பேட்டிக்கு ஏற்பாடு செய்தது பதிவர் ராஜாராமன்(விந்தை மனிதன்) அவர்கள். மொத்தப்பேட்டியும் அலைபேசியில் ஆடியோவாக பதிவு  செய்யப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட சில காரணங்களுக்காக பதிவிடுதல் தள்ளிப்போடப்பட்டு வந்தது. ஒருவழியாக ஆடியோ தொகுப்பை 'அஞ்சாசிங்கம்' செல்வினிடமிருந்து வாங்கி பேட்டியை பதிவேற்ற வேண்டிய தருணம் வாய்த்து விட்டது.    இதற்கு முன் நான் ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தினுள் பிரவேசித்ததுமில்லை. முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரை சந்தித்து உரையாடியதும் இல்லை. எனவே ராஜாராமின் அழைப்பை ஏற்று எழும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தை அடைந்தேன். பேட்டியினூடே எம்முடன் இணைந்தனர் அஞ்சாசிங்கமும், நண்பர் சதீசும்.   

அலுவலகத்தின் மாடியில் எம்மை வரவேற்றார் சம்பத் அவர்கள். அடுத்த சில நிமிடங்களில் பேட்டி தொடங்கியது. சில கேள்விகள் மட்டுமே 2011 சட்டசபை தேர்தலுக்கு தொடர்புடையவை. பெரும்பாலானவை ம.தி.மு.க. கட்சியின் செயல்பாடு, எதிர்கால திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியவை என்பதால் நிகழ்காலத்திற்கும் பொருந்தும் வண்ணமாக இப்பேட்டி அமையும் என நம்புகிறோம். குறிப்பாக சங்கரன் கோவிலில் அனல் பறக்கும் நேரத்தில் சூடான இந்த 'அரசியல் டீ' சுவாரஸ்யத்தை தருமென நம்புகிறோம். ராஜாராமன் கேட்ட கேள்விகளில் கட்சிசாராத நண்பர்கள் நாஞ்சில் சம்பத்திடம் கேட்கச்சொன்ன கேள்விகளும் அடக்கம்.  இனி பேட்டி:  

ராஜாராமன்: 1996 இல் வைகோ 'நாங்கள் ஆட்சிக்கு வருவோம்' என்றார். ஆனால் இன்றுவரை அது நடக்கவில்லை. இன்றைக்கு கட்சி ஒரு முட்டுச்சந்தில் இருப்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறதே. இது ஏன்?

நாஞ்சில் சம்பத்: நாங்கள் இப்படி ஒரு நிலையில் இருக்கிறோம் என்பது சிலர் கட்டவிழ்த்து விடும் பொய்ப்பிரச்சாரம். ம.தி.மு.க.இப்போதுதான் சிட்டுக்குருவியாக விடுதலையாகி பறக்கிறது(அ.தி.மு.க.  கூட்டணி முறிவு). இனி தன்னிச்சையாக இயங்குவோம். எங்கள் கொள்கையை அழுத்தமாக மக்களிடம் பதிவு செய்வோம். யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் எங்கள் பயணத்தை முன்னெடுத்து செல்ல தருணம் வந்துள்ளது.  இக்கட்டான கால கட்டத்தை நாங்கள் கடந்து விட்டோம். முட்டுச்சந்தில் இல்லை. முன்னேற்றத்தின் முதல் படியில் காலெடுத்து வைத்துள்ளோம். 96 இல் எங்கள்  கட்சி '2006 இல் ஆட்சியை பிடிப்போம்' என்று சொன்னது உண்மைதான். ஆனால் அதற்கு சாதகமான சூழல் நிலவவில்லை.  அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு இருப்பின் நாங்கள் வென்றிருப்போம்.  ஆனால் இந்த மண்ணில் விலை போகிற கூட்டணி தர்மம் நிலவுகிறது. கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து செல்கையில் இதையெல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. மறுமலர்ச்சி என்பது எளிதில் வந்துவிடாது. அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும். உயிரிழப்புகள் இருக்கும். அடக்கு முறைகள் இருக்கும். துயரங்கள்  இருக்கும். அனைத்தையும் தாண்டி நாங்கள் எங்கள் பயணத்தை தொடருவோம். கண்ணீரோடு விதைத்து இருக்கிறோம். கம்பீரத்துடன் அறுவடை செய்யும் காலம் வரும்.

ராஜா: 93 இல் கட்சி துவங்கப்பட்டது. அப்போது இருபதுகளில் இருந்த இளைஞர்கள் இப்போது நடுத்தர வயதை எட்டி இருப்பர். முன்பு இருந்த வேகம் அவர்களிடம் இருக்குமா? அவர்களை தக்க வைப்பதும், புதிதாக இளைஞர்களை ஈர்ப்பதும் சாத்தியமா?


சம்பத்: ம.தி.மு.க.வை தொடங்கும்போது என் வயது 33. இப்போது 50. ஆனால் முன்பை விட எனக்கு ஊக்கம் அதிகமாகி உள்ளது. அதுபோல்தான் எங்கள் தலைவர் வைகோவும். எங்கள் கோலங்கள் மாறலாம். கொள்கைகளில் சமரசமில்லை. அடுத்த தலைமுறையின் கையில் கட்சி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 40 வயதான பொறியியல் பட்டதாரி ஈஸ்வரன்(கோவை மாவட்ட செயலாளர்) கட்சிக்காக 50 லட்ச ரூபாய் நிதி திரட்டி தந்துள்ளார். இதுவரை எவரும் கட்சிக்காக இவ்வளவு நிதி திரட்டியதில்லை. கொஞ்சனூர் ராமசாமி என்றொருவர் கட்சியில் இருந்தார். திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார். அவரால் கூட 13 லட்சம்தான் எமது கட்சிக்காக திரட்ட முடிந்தது. என்னை விட வயது குறைந்த பரணி மணி 41 லட்சம் திரட்டினார். இப்படி பலருண்டு. லட்சிய தாகம் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களின் நந்தவனமாக ம.தி.மு.க. மட்டுமே உள்ளது.


ராஜாராமன்: புதிய வாக்காளர்களை ஈர்க்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

சம்பத்: மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் தோறும் வாயில் கூட்டங்கள் நடத்தி அந்த நாற்றுக்களை(கல்லூரி மாணவர்கள்) எங்கள் பாத்தியில் நாடும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

ராஜாராமன்: வைகோ மீதான நன்மதிப்பு நகரம் சார்ந்த மக்கள் மத்தியில் சற்று அதிகமாகி வருகிறது எனத்தெரிகிறது. இதை தக்கவைக்க நடுநிலையான , கிராம வாக்காளர்களை ஈர்க்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

சம்பத்: இவர்களை ஈர்க்கும் வல்லமை உள்ள ஒரே தலைவர் வைகோதான். அவருடைய அமானுஷ்ய ஆற்றல், அபாரமான நினைவாற்றல், களமாடும் போர்க்குணம், எந்த சவாலையும் எதிர் கொள்ளும் துணிச்சல், விவாதம் செய்யும் வல்லாண்மை, உலக அரங்கில் உரிமை இழந்த தமிழர்க்கு அங்கீகாரம் பெற்றுத்தர சிந்திக்கும் நல்லெண்ணம் இவையெல்லாம் நடுநிலையாளர்களிடம் ஏற்கனவே விதைக்கப்பட்டு விட்டது. அறுவடை செய்கிற காலம் வரும். கல் அழுதது, சிற்பம் பிறந்தது.  ஷாஜஹான் அழுதான் , தாஜ்மகால் பிறந்தது. வைகோ அழுதார், ம.தி.மு.க. பிறந்தது. கண்ணீரோடு தொடங்கிய பயணம் வெற்றிகளை சந்திக்கும் என்கிற கனத்த நம்பிக்கையில் உள்ளோம்.

ராஜாராமன்: ம.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்தது போல் இதற்கு முன்பு இதுபோன்ற சரியான முன்னுதாரணங்கள் இருந்துள்ளனவா?

சம்பத்: இருக்கிறது. 1967 - 1977 வரை மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த இடைப்பட்ட நேரத்தில் கடும் களப்பணி மற்றும் கட்சிப்பணியை ஆற்றினர். அதன் விளைவாக 1977 முதல் பல ஆண்டுகள் அக்கட்சி கொடிகட்டிப்பறந்தது.

                                                                 
ராஜாராமன்: தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம் பயணம் செய்து மக்களை சந்தித்த தலைவர் என்று சொன்னால் இன்றைய அரசியலில் வைகோவை தவிர எவருமில்லை. ஆனால் ஈழம் சார்ந்த பிரச்னைகளை மட்டுமே மையப்படுத்தி பெரும்பாலும் பேசிவரும் வைகோ, தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு என்ன குரல் தந்துள்ளார் என கேள்விகள் எழுகின்றனவே?


சம்பத்: தமிழகத்திற்கு வைகோ எதுவும் பேசவில்லை என்பது ஊடகங்கள் வன்மம் கொண்டு எழுப்பும் குற்றச்சாட்டு. முல்லைப்பெரியார் பிரச்னையில் கேரளம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியபோது 10,000 பேரை திரட்டி கேரளா எல்லையில் மறியல்  போராட்டம் செய்தவர் வைகோ. அதற்காக மதுரையில் இருந்து கூடலூர் வரை நடந்து சென்றவர் வைகோ. தூத்துக்குடியில் 10 லட்சம் மக்களின் உயிரை காவு கேட்கின்ற ஸ்டெர்லைட் என்கிற நச்சு ஆலையை மூடக்கோரி வைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை நடந்து வந்தவர் வைகோ. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எங்கள் தலைவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் போராடி அதை பொதுத்துறை நிறுவனம் ஆக்கியவர் வைகோ. காவேரி பிரச்னைக்கு தொடர்ந்து குரல் தந்தவர். திருநெல்வேலி முதல் சென்னை வரை 1,400 கி.மீ. நடந்து வருகையில் மக்களிடம் "நிலங்களை விற்காதீர்.  நதி இணைப்புக்கு குரல் குடுங்கள்" என்றவர் அவர். ஏடுகளும்,ஊடகங்களும் எங்களை ஒதுக்கி வைத்துள்ள சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். ஈழத்திற்கு மட்டுமே நாங்கள் குரல் தருகிறோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல.


ராஜாராமன்: ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் கம்யூனிஸ்டுகளும் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் இருந்து உங்கள் போராட்டம் எவ்வாறு வேறுபடுகிறது, எவ்வகையில் வலிமை வாய்ந்ததாக உள்ளது?


சம்பத்: இப்போராட்டத்தில் பலர் பின்வாங்கி விட்டனர். இப்போது வைகோ மட்டுமே களத்தில் உள்ளார். வைகோவை தவிர அனைவரையும் அந்நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டது. அதன் நிர்வாகி அகர்வால் வைகோவை சந்திக்க பலமுறை முயன்றும் தலைவர் தவிர்த்து விட்டார். வைகோ பயணம் செய்யப்போகும்  விமானம் எது என்பதை அறிந்து அதே விமானத்தில் அவரும் பயணித்து வைகோவை சந்திக்க முயன்றார். கொடுங்கோலன் முசோலினியை சந்திக்க மறுத்த நேருவைப்போல, தூத்துக்குடி மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காவு கேட்கின்ற அகர்வாலை வைகோ சந்திக்க மறுத்தார். ஆகவே, இந்த பிரச்னையில் நாங்கள்தான் களத்தில் உள்ளோம். மற்றவர்கள் பின்வாங்கி விட்டனர் என்பது கசப்பானது எனினும் அதுதான் உண்மை.


தொடரும்....
.................................

குறிப்பு: சில மாதங்களுக்கு முன்பு madrasbhavan.com தளத்தில் வெளியான பேட்டி இங்கு மீண்டும் வெளியிடப்பட்டு உள்ளது.

நன்றி
!சிவகுமார்! 





5 comments:

  1. மூவர் கூட்டணி க்கு வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. ம்ம்ம்ம் நோ கமென்ட்

    ReplyDelete
  4. சிவாவும் இப்ப அரசியல்வாதி ஆகிட்டாரா????
    நடக்கட்டும்..நடக்கட்டும்.....
    உங்கள் கூட்டு முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. //ராஜா: 93 இல் கட்சி துவங்கப்பட்டது. அப்போது இருபதுகளில் இருந்த இளைஞர்கள் இப்போது நடுத்தர வயதை எட்டி இருப்பர். முன்பு இருந்த வேகம் அவர்களிடம் இருக்குமா? அவர்களை தக்க வைப்பதும், புதிதாக இளைஞர்களை ஈர்ப்பதும் சாத்தியமா?

    சம்பத்: ம.தி.மு.க.வை தொடங்கும்போது என் வயது 33. இப்போது 50. ஆனால் முன்பை விட எனக்கு ஊக்கம் அதிகமாகி உள்ளது. அதுபோல்தான் எங்கள் தலைவர் வைகோவும். எங்கள் கோலங்கள் மாறலாம். கொள்கைகளில் சமரசமில்லை. அடுத்த தலைமுறையின் கையில் கட்சி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 40 வயதான பொறியியல் பட்டதாரி ஈஸ்வரன்(கோவை மாவட்ட செயலாளர்) கட்சிக்காக 50 லட்ச ரூபாய் நிதி திரட்டி தந்துள்ளார். இதுவரை எவரும் கட்சிக்காக இவ்வளவு நிதி திரட்டியதில்லை. கொஞ்சனூர் ராமசாமி என்றொருவர் கட்சியில் இருந்தார். திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார். அவரால் கூட 13 லட்சம்தான் எமது கட்சிக்காக திரட்ட முடிந்தது. என்னை விட வயது குறைந்த பரணி மணி 41 லட்சம் திரட்டினார். இப்படி பலருண்டு. லட்சிய தாகம் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களின் நந்தவனமாக ம.தி.மு.க. மட்டுமே உள்ளது.//

    நிதி திரட்டுவதை எல்லாம் லட்சிய தாகமாக, செயல்பாடாக ஏற்க்க இயலாது. மக்களுக்கு இது வரை என்ன செய்துள்ளார்கள் என்பதுதான் முக்கியம். இருப்பினும் கட்சிக்கு நிதி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை.

    //தமிழகத்திற்கு வைகோ எதுவும் பேசவில்லை என்பது ஊடகங்கள் வன்மம் கொண்டு எழுப்பும் குற்றச்சாட்டு. முல்லைப்பெரியார் பிரச்னையில் கேரளம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியபோது 10,000 பேரை திரட்டி கேரளா எல்லையில் மறியல் போராட்டம் செய்தவர் வைகோ. அதற்காக மதுரையில் இருந்து கூடலூர் வரை நடந்து சென்றவர் வைகோ. தூத்துக்குடியில் 10 லட்சம் மக்களின் உயிரை காவு கேட்கின்ற ஸ்டெர்லைட் என்கிற நச்சு ஆலையை மூடக்கோரி வைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை நடந்து வந்தவர் வைகோ. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எங்கள் தலைவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் போராடி அதை பொதுத்துறை நிறுவனம் ஆக்கியவர் வைகோ. காவேரி பிரச்னைக்கு தொடர்ந்து குரல் தந்தவர். திருநெல்வேலி முதல் சென்னை வரை 1,400 கி.மீ. நடந்து வருகையில் மக்களிடம் "நிலங்களை விற்காதீர். நதி இணைப்புக்கு குரல் குடுங்கள்" என்றவர் அவர். ஏடுகளும்,ஊடகங்களும் எங்களை ஒதுக்கி வைத்துள்ள சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். ஈழத்திற்கு மட்டுமே நாங்கள் குரல் தருகிறோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல.//

    இதை ஏற்கிறேன்.
    நல்ல பேட்டி
    நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....வைகோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
    இப்படிக்கு சக அரசியல்வாதி :)

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator