Wednesday, 26 September 2012

ஜெயலலிதா-சசிகலா நட்பு : ஒரு பார்வை

 டிஸ்கி : சகோதரி ஆமினா அவர்கள் ஜெ-சசி நட்பைப் பற்றி விளக்கி ஒரு பதிவிடுமாறு கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நாம் எழுதியிருப்பதே இந்தப் பதிவு.

அரசியல் என்பது சமூக சேவை என்பதையும் தாண்டி, நல்ல ஒரு பிஸினஸாக ஆகிவிட்ட காலகட்டம் இது. எல்லாத் தொழிலையும் போலவே அரசியலிலும் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. அதை வெற்றிகரமாக நடத்த, சில நம்பகமான ஆட்களும் தேவைப்படுகிறார்கள்.

ஒரு பிஸினஸ்மேன் பொதுவாக குடும்ப உறுப்பினர்களை வைத்தே, தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்திவிட முடியும். உடன்பிறந்தோர், மச்சினர்கள், பிள்ளைகள் என ஒரு பிஸினஸ்மேனுக்கு தோள் கொடுக்க நல்ல உறவுக்கூட்டம் அவசியம் ஆகிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு ஓட்டுக்கு 300 முதல் 2000 வரை காசு வாங்கிவிட்டே போடும் மனநிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டார்கள். அரசியல்வாதிகள் தான் மக்களை அப்படிக் கெடுத்துவிட்டார்கள் என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், மக்களின் மீதும் பெரும் தவறு இருக்கிறது. ஒரு கட்சி, ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 2 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய நிலை. (வேட்பாளர் செலவழிக்கும் கோடிகள் தனி!). அதைத் தவிர, கூட்டணியில் அங்கம் வகிக்கும் உதிரிக்கட்சிகளின் தேர்தல் செலவில் பெரும்பகுதியை பெரிய கட்சிகளே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே ஒரு தேர்தலை சந்திக்க வேண்டுமென்றால், ஒரு பெரிய கட்சி குறைந்த பட்சம் ரூபாய்.1500 கோடியை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம். இந்த பணத்தில் பகுதி ஊழல் மூலமாகவும், பகுதி தொழிலதிபர்கள் தரும் நிதி மூலமாகவும் திரட்டப்படுகிறது. தேர்தலைத் தவிர மாநாடு-பொதுக்கூட்டம்-முன்னால்/பின்னால் வரும் கார்களின் டீசல் செலவு இத்யாதிகள் என, பல்லாயிரம் கோடி முதலீடுகள் தேவைப்படும் / பல்லாயிரம் கோடிகளை கையில் வைத்திருக்க வேண்டிய பிஸினஸே இன்றைய அரசியல்.

அரசியல் பற்றிய இத்தகைய புரிதலோடு தான் நாம் ஜெயலலிதா-சசிகலா நட்பை ஆராய வேண்டும். எம்.ஜி.ஆர் வயோதிகத்தால் பலவீனமடைந்திருந்த காலகட்டத்தில், அதிமுகவில் நெடுஞ்செழியன் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்-வீரப்பன் - சோமசுந்தரம்-திருநாவுக்கரசு என பல (அப்போதைய) ஜாம்பவான்கள் பிரபலமான புள்ளிகளாக இருந்து வந்தார்கள். அப்போது ஆண்களின் உலகமாக இருந்த  தமிழக அரசியலில், இத்தனை ஆண்களையும் மீறி ஒரு பெண் மேலெழுந்து வருவது சாதாரண விஷயமே அல்ல. அதற்குரிய போராட்ட குணம் ஜெயலலிதாவிடம் இருந்தாலும், ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தை (மேலே விளக்கியபடி) கட்டமைக்க, நம்பிக்கையான ஆள் பலம் தேவைப்பட்டது.

திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அப்போது ஜெயலலிதாவை முன்னிறுத்தினாலும், எப்போது வேண்டுமானாலும் ஜெயலலிதாவுக்கு எதிராக அவர்கள் திரும்பும் வாய்ப்பு இருந்தது. அது பின்னால் நடக்கவும் செய்தது. அத்தகைய சூழ்நிலையில், ஜெயலலிதாவிற்கு நல்ல தோழியாக அறிமுகம் ஆனார் சசிகலா. (அது பற்றிய மேலதிக விவரத்திற்கு: கஸாலி எழுதிய ஜெயலலிதா வாழ்க்கை வரலாறைப் படிக்கவும்).


அரசியல் எனும் தொழிலுக்கான நிதியை சேர்ப்பது, அதை நிர்வகிப்பது, தேர்தல் நேரத்தில் சரியானபடி மாநிலம் முழுக்க பகிர்ந்தளிப்பது, கட்சியில் தனக்கு இணையான செல்வாக்கு உள்ள ஜாம்பவான்களை செல்லாக்காசாக்குவது, பிறகு ஒழித்துக்கட்டுவது என இன்றைய அரசியலுக்கான தகிடுதத்த வேலைகள் எல்லாக் கட்சிகளிலும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. சில தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன், பல மனைவி-துணைவி-குடும்பங்களை உருவாக்கி, இதைச் சமாளித்த சூழ்நிலையில், ஜெயலலிதாவிற்கு அப்படி அமைந்த நட்புக்கூட்டம் தான் சசிகலா குரூப்.

கட்சி விஷயங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சிச் சேனல்களை நிர்வகிப்பது, மிடாஸ் போன்ற தொழில்களை பினாமி பெயரில் நடத்திக்கொண்டுப்பது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என பல விஷயங்களிலும் சசிகலாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. சமூக நோக்கில், நியாய தர்ம அடிப்படையில் சசிகலா நட்பு, தவறானது தான். ஆனால் ஜெயலலிதாவின் பார்வையில், சசிகலா செய்திருப்பது சாதாரண விஷயமல்ல.

ஜெயலலிதா முதன்முதலாக ஆட்சிக்கு வந்ததும், அடுத்து பல தேர்தல்களை சந்திக்கத் தேவையான நிதியை கண்மூடித்தனாக ஊழல் செய்து, சேர்த்துக் குவித்தார். பெரும்பாலான நிதி, சசிகலா குரூப்பாலேயே நிர்வகிக்கப்பட்டதை, பல சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் மூலம் வெளிவந்தது. ஆனால் ஒரு அரசியல்வாதிக்கு பதவிக்கு அடுத்தபடியாக, அதிகாரத்தைத் தருவது பணம் தான். இதை ஜெயலலிதா-சசிகலா நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

 மற்ற அரசியல்வாதிகள் பொறுமையாக இருபது வருடங்களாக செய்த காரியத்தை, ஐந்தே வருடங்களில் செய்து முடித்தார்கள்.

அதனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதும், அதனால் அவர் ஆட்சியை இழந்ததும் நாம் அறிந்ததே. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் எடுத்த நடவடிக்கைகளால், ஜெயலலிதாவின் இமேஜ் டோட்டலாக டேமேஜ் ஆனது. அந்த நேரத்தில், அதை எதிர்கொள்ள ஜெயலலிதாவும், அவருக்கு ஆதரவான
 ஊடகங்களும் ஒரு கதையை கட்டவிழ்த்தன. அந்த கதையின் சுருக்கம் ‘ஜெயலலிதாவிற்கு ஒன்றுமே தெரியாது. எல்லாமே சசிகலா குரூப் செய்த தவறுகள் தான்’. அந்த கதை மக்களிடம் நன்றாகவே எடுபட்டது. அடுத்து வந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற அது உதவியது. அதன்பின், எப்போதெல்லாம் ஜெயலலிதா மேல் குற்றச்சாட்டுகள் குவிகின்றனவோ, அப்போதெல்லாம் இதே கதை ஊடகங்களால் பரப்பப்படும். (படிக்க:
சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும்)

பொதுவாகவே இத்தைகைய சூழ்நிலையில், அதுவும் நன்றாகச் சம்பாதித்தபின், இப்படி பழி சொல்லும் நபருடன் உறவைத் தொடர வேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது. ஆனால் சசிகலா அந்த நேரத்தில் காட்டும் அமைதியும், எத்தகைய சூழ்நிலையிலும் கோர்ட்டால் அலைக்கழிக்கப்பட்டாலும் ஜெயலலிதவிற்கு எதிராக ஒரு வார்த்தையையும் உதிர்க்காத தன்மையுமே அவர்களது நட்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.

சந்தோசத்தைப் பகிரும் சொந்தங்கள்கூட கஷ்டத்தில் நம்மை விட்டு விலகி ஓடிவிடுகின்றன. ஆனால் சசிகலா தனது கணவர் உள்ளிட்ட பலரின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல், ஜெயலலிதாவின் கஷ்டகாலத்தில் விட்டு ஓடாமல் கூடவே நின்றார். தற்போதைய அரசியல் வரலாற்றில், இந்த அளவிற்கு நட்புக்கு எடுத்துக்காட்டாக, வேறு யாரையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. அவர்களது நட்பு, இந்த சமூகத்திற்கு செய்திருப்பது நன்மையா-தீமையா என்ற ஆராய்ச்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.


டிஸ்கி : நண்பர்கள் யாரும் தயவு செய்து இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவோ, ஓட்டுப்போடவோ வேண்டாம். நன்றி - செங்கோவி

 ----------------------------------------------------------------------------------------------------------------------------
இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


8 comments:

 1. ம்ம்ம்ம்... ஆனாலும் மனைவி-துணைவி குடும்பங்கள் மூலமாக வரும் ஆபத்தை விட, இந்த நட்பால் வரும் ஆபத்து குறைவாகவே உள்ளது(அல்லது அவ்வாறு காட்டபடுகிறது)

  ReplyDelete
 2. கலக்கல் செங்கோவி. ஜெ-சசி நட்பை யாரும் அனுகாத ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகியுள்ளீர். அருமை நண்பா.

  ReplyDelete
 3. கலக்கல் செங்கோவி. ஜெ-சசி நட்பை யாரும் அனுகாத ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகியுள்ளீர். அருமை நண்பா.

  ReplyDelete
 4. ரொம்ப நன்றிங்க...

  எனக்கும் கூட ஜெ-சசி நட்பு மேல் அவ்வளவு ப்ரியம் :-) எனக்காக பதிவிட்டதுக்கு நன்றி

  //டிஸ்கி : நண்பர்கள் யாரும் தயவு செய்து இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவோ, ஓட்டுப்போடவோ வேண்டாம். நன்றி - செங்கோவி//

  இதை முஸ்கியாக போட்டிருக்கலாம்..எனக்காக ஒரு பதிவுன்னு சொன்னதும் ஓட்டு போட்டுட்டு தான் அப்பறம் படிச்சேன் அவ்வ்வ்வ்வ்

  அருமையான பகிர்வு. நன்றி

  வாழ்த்துகள் இருவருக்கும்

  ReplyDelete
 5. தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

  ReplyDelete
 6. வரும் சட்டசபை தேர்தலில் தனது தொகுதியில் ஆமினா அன்னபோஸ்ட் ஆக ஜெயிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. //வரும் சட்டசபை தேர்தலில் தனது தொகுதியில் ஆமினா அன்னபோஸ்ட் ஆக ஜெயிக்க வாழ்த்துகள். //

   சிவா தான் ராஜதந்திரி :-))) அரசியலை கரைத்து சர்ப்பத்தாக குடித்தவர் என்பதால்.... :-))

   Delete
 7. புதிய கோணத்தில் இருவரின் நட்பை பற்றி சொல்லி உள்ளீர்கள்....அருமை

  ReplyDelete

இது உங்கள் இடம்.