Wednesday 14 September 2011

காந்தி சுடப்பட்டது ஏன்?- வைரவேல் என்னாச்சு?(அரசியல் கேள்வி பதில்கள்-பாகம்-3)

கேள்வி கேட்டவர் : ஏகலைவன்  

1. இந்துத்வாக்காரரான கோட்சே, காந்தியைச் சுட்டது ஏன்?


1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.


காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.



"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.



"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். 


இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. 


"ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.


சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.



போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 


தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.


கைது செய்யப்பட்ட கோட்சே டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை எதற்காக கொன்றேன் என்று   வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.




சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்


+++++++++++++++++



2. திருச்செந்தூர் முருகன் கோவில் தங்க வேல் காணாமல் போனது உண்மையா? அதைத் திருடியது யார்? அந்த வழக்கு என்ன ஆனது?


“திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் உதவி ஆணையர்  சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்.

 கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது ஆர்.எம்.வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது.

திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
விசாரனை முடித்து முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கையை கொடுத்த பால், அடுத்த நாளே அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிட்டார்.
நீதிபதி சி.ஜெ.ஆர். பால் கொடுத்த அறிக்கை சாதகமாக இல்லை என்பதால் அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், அறிக்கையின் நகல் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கலைஞர் கிடைத்ததால் நகல்களை ஏடுகள் மூலமாக கலைஞர் வெளியிட்டார்.

சட்டப் பேரவையில் அந்த அறிக்கை மீது விவாதம் நடந்தபோது, ‘அறிக்கை எவ்வாறு வெளியானது, அதற்கு யாரை பழி வாங்குவது என்றெல்லாம் அரசு நேரத்தை செலவிடாமல், அறிக்கையில் கூறியிருப்பது என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் கலைஞர்..

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 1982- பிப்ரவரி 12-இல் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு சுமார் 200 கிலோமீட்டர் ஒருவாரம்  நடைபயணம் சென்றார் கலைஞர். நடக்க நடக்க காலில் கொப்புளம் ஏற்பட்டதியும் மீறி காலில் கட்டுப்போட்டுக்கொண்டு நடந்தார். வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எரிச்சலடைந்த எம்.ஜி.ஆர். சட்டசபையை கூட்டினர். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே கலைஞர் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்றார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதன் பிறகு அந்த கமிஷன் என்னச்சு என்றே தெரியவில்லை.

***************************
உங்களின் கேள்விக்கு நன்றி ஏகலைவன்.
இந்த இரு கேள்வியின் பதில்களே மிக நீளமாக இருப்பதால் உங்களின் மற்ற கேள்விகளுக்கான விடை விரைவில்......

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


3 comments:

  1. இன்று புது தகவல் ஒன்றை தெரிந்து கொண்டேன், வேல் விஷயம்..

    ReplyDelete
  2. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. இன்று தான் தங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன் ....

    பகிர்வுக்கு நன்றி .......


    ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator