Monday 19 September 2011

ஒரு விளக்கமும், ஒரு பதிலும்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-5)

என்ற பதிவில் ராவணன் என்ற நண்பரிடமிருந்து வந்த பின்னூட்டம் இதோ.....

சும்மா பிகிள் விடவேண்டாம், கருணாநிதி என்ற நபர் எப்போதும் எதற்காகவும் உண்மையாகப் போராடியது கிடையாது. கண்ணதாசனின் வனவாசம் படித்தால் இந்தத் தண்டவாள மேட்டர் எல்லாம் வண்டவாளம் ஏறும்.

ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

என்ன கொடுமை இது?

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.

அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

அதற்கான என் பதில் கீழே....


 /////நான் பிகிளெல்லாம் விடவில்லை நண்பரே...கல்லக்குடி போராட்டம் பற்றி நான் என் சொந்தக்கருத்தை பதியவில்லை. அதே நேரம், முரசொலியில் இருந்தோ, நெஞ்சுக்கு நீதியில் இருந்தோ இதை எடுக்கவில்லை. வரலாற்று பக்கங்களில் எது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதைத்தான் எடுத்து சொல்லியுள்ளேன். உங்களுக்கு கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். அதற்காக வரலாற்றை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதே வரலாறுதான் கண்னதாசனையும் இப்படி சொல்கிறது.
கலைஞர் கைது செய்யப்பட்ட பின்...மதியம் 1:30- மணியளவில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 41-பேர் ரயில் முன் படுத்து மறியல் செய்தனர். கூட்டத்தை கலைக்க போலிசார் தடியடி நடத்தினர். அப்படியும் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் வந்து தண்டவாளத்தில் படுத்தனர்.

கண்ணதாசனையும், மற்றவர்களையும் போலீசார் பலவந்தமாக தண்டவாளத்திலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அடித்தனர். அவரை கைது செய்து ரத்தம் சொட்டசொட்ட அவரை லாரியில் ஏற்றினர். ////



ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

என்ன கொடுமை இது?

////இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கலைஞரை யார் தியாகி என்றது? அந்த உண்ணாவிரதம் பெரும் கேலுக்கும், நகைப்புக்கும் உண்டானதை நான் அறிவேன். அதே நேரம் 1970-க்கு முன்பு  கலைஞரிடம் ஒரு போர்க்குணம் இருந்தது உணமை. அந்த போர்க்குணம் இன்று குடும்பம் என்ற சூழலில் சிக்கி நீர்த்துப்போய்விட்டதும் உண்மை ///


கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.


////டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றுவதற்காக 1953-இல் தண்டவாளத்தில் தலை வைத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார் அல்லவா? அதற்கு 16 ஆண்டுகளுக்குப்பிறகு பலன் கிடைத்தது. 1969-இல் டால்மியாபுர ரெயில் நிலையத்தின் பெயரை "கல்லக்குடி-பழங்காநத்தம்" என்று மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

கல்லக்குடிப் போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடெங்கும் விழாக்கள் நடைபெற்றன. கல்லக்குடியில் பெரிய விழா ஒன்றுக்கு அன்பில் தர்மலிங்கம் ஏற்பாடு செய்தார்.

இதில் கலந்து கொண்ட முதல்_அமைச்சர் கருணாநிதி, 1953-இல் போராட்டம் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். "கல்லக்குடி-பழங்காநத்தம்" என்ற பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார் என்றும் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. ///

அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

///அண்ணா பொடிப்போட்டு பேசுவார் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.///

 கண்ணதாசனின் வனவாசம் பற்றி அடுத்த கேள்வி- பதிலை படிக்கவும்.

==================



கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கலைஞர் இது வரை படிக்காத புத்தகம் என்று கூறியதாக ஒரு தகவலும் உலா வருகிறது, அது உண்மையா?
 கலைஞர் படித்திருப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.

1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கோர்த்து எழுதப்பட்ட என் சுயசரிதைதான் இந்த வனவாசம் என்று கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.  பெயர்தான் வனவாசமே தவிர...உள்ளிருக்கும் எழுத்தெல்லாம்  யார் மீதாவது சேற்றை வாறி இறைப்பதாகவே இருக்கிறது. 

தனக்கு பிடிக்காத தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுக்களை அடுக்கும் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவைக்கூட விட்டுவைக்கவில்லை. வனவாசத்தை விரக்தியின் வெளிப்படு என்றும், வயிற்றெரிச்சலின் எழுத்து வடிவம் என்றும் சொல்கிறார்கள் அதை படித்தவர்கள். 


அப்படி கண்ணதாசன் கலைஞர் மீது சேற்றை வீசுவதற்கு காரணம் இருக்கிறது.
தி.மு.க.,வில் எப்போதும் ஈ.வி.கே.சம்பத்திற்கும், கலைஞருக்கும் ஆகாது. அதே நேரம் கண்ணதாசன் சம்பத்தின் தீவிர ஆதரவாளர். சம்பத் தான் என் தலைவர் என்று பகிரங்கமாக முழங்கியவர். தி.மு.க.,வை விட்டு சம்பத் விலகி தமிழ் தேசிய கட்சியை ஆரம்பிக்க கண்ணதாசனும் ஒரு காரணம். அப்படிப்பட்டவர் எப்படி கலைஞரை பற்றி நல்லவிதமாக எழுதுவார்?. இவ்வளவு ஏன் அதே வனவாசத்தில் அண்ணாவை விட சம்பத்திற்கே செல்வாக்கு அதிகம் இருந்ததாகவும், அதனால், சம்பத்தை பார்த்து அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார் எனவும் எழுதியுள்ளார்.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றெல்லாம் சரடு விட்டிருக்கார் கண்ணதாசன். 

மேலும்,அண்ணா பொதுச்செயலாளரான பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார் என்றும் வேலூரில் தி.மு.க.,பொதுக்குழுவிற்காக தீர்மானம் தயாரிக்கும் பணியிலிருந்த சம்பத்தை தாக்க அண்ணாவின் ஆசியுடன் கலைஞர் ஆள் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படி அண்ணாவையும் தாக்கும் காரணம், சம்பத்தை விட கலைஞருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்ததுதான்.  

கவிஞர்களுக்கு கற்பனையும், பொய்யும் தான் மூலதனம். அதனால்தான் கவிதைக்கு பொய்யழகு என்கிறார்கள். ஆனால், கண்ணதாசனின் கற்பனை வரியும் , பொய்யும் கவிதையில் மட்டுமல்லாது வனவாசம் என்ற அவரது சுயசரிதையிலும் இடம் பிடித்திருக்கிறது.

 ================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 
உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


3 comments:

  1. உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறாமல் வரலாற்று பக்கங்களில் இருந்து பதில் கொடுப்பது எனக்கு பிடித்திருக்கிறது, அடுத்த கேள்வி உங்கள் மினஞ்சளுக்கு தயாராகி கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  2. கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை 2000க்கு முன் 2000க்குப் பின் என்றே வகைப்படுத்தலாம்.முந்தைய கருணாநிதியின் போராட்டக்குணத்தை மறுப்பதற்கில்லை.இப்பொழுது நொறுங்கிய சொம்பு என்பதையும் மறுப்பதற்கில்லை.

    ReplyDelete
  3. கலைஞரின் பொதுவாழ்க்கையை பற்றி விமர்சிப்பவர்கள் இந்த சமுகத்திறக்கு நாம் என்ன செய்தோம் என்பதை சிறிது யோசித்துவிட்டு விமர்சனம் செய்ய முயற்ச்சித்தால் நல்லது

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator