Showing posts with label கேள்வி-பதில்கள். Show all posts
Showing posts with label கேள்வி-பதில்கள். Show all posts

Saturday, 22 September 2012

தி.மு.க.,விலிருந்து சிவாஜி விலகியதன் பின்னணி


எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்து வளர்ந்த வரலாறு என்ற பதிவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருப்பதி போய்வந்த சர்ச்சையால் தி.மு.க.,வை விட்டு விலகினார் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எம்.ஜி.ஆரை பற்றிய பதிவென்பதால் சிவாஜியை பற்றி மேலோட்டமாகவே குறிப்பிட்டிருந்தேன். அதை பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் என்று ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்த பின்னூட்டத்திற்கான பதில்தான் இது....

1957-ஆம் ஆண்டு, பெரும் புயலில் சிக்கியது. தி.மு.க.,சார்பில் புயல் நிவாரண நிதி திரட்டுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் கோரிக்கை விடுத்தார். அண்ணாவின் கோரிக்கையை ஏற்று நிதி திரட்டும் பணியில் நடிகர்கள் ஈடுபட்டனர். அதில் சிவாஜியும் ஒருவர். நிறைய நிதி வசூலானது.

அதிக நிதி வசூலித்தவர்களுக்கு பாராட்டுவிழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள சிவாஜிக்கு அழைப்பில்லை. அதே நேரம், அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு எம்.ஜி.ஆர்., அழைக்கப்பட்டிருந்தார். அதிக நிதி வசூலித்து தந்ததாக எம்.ஜி.ஆரை அண்ணாவும் மற்றவர்களும் பாராட்டினார்கள்.

என்னை ஒதுக்கவேண்டும் என்பதற்காகவே எம்.ஜி.ஆரை பாராட்டியிருக்கிறார்கள், என்னை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறார்கள் என்று அதிருப்தி தெரிவித்தார் சிவாஜி.
கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்த சிவாஜியை, அவருக்கு தி.மு.க.மீதிருந்த அதிருப்தியை பயன்படுத்தி அந்த நேரத்தில் அவரை திருப்பதி அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்யவைத்தார் இயக்குனர் பீம்சிங்.

 நாத்திகரான சிவாஜி திருப்பதிக்கு சென்றதை அறிந்த பத்திரிகையினர்  நாத்திகரான சிவாஜி ஆத்திகராக மாறினார் என்று செய்தி வெளியிட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை திரும்பும் வழிகளில் சுவரெங்கும் திருப்பதி கணேசா கோவிந்தா..கோவிந்தா என்று எழுதியிருந்தனர். இதை கவனித்த சிவாஜி மனம் வேதனை அடைந்தார். மேலும், சிவாஜியின் போஸ்டர்களில் சாணி அடித்த செய்தியும் அவரின் கவனத்திற்கு வந்தது. கடுப்பாகிவிட்டார்.


இனிமேலும், பொறுமையாக இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவுசெய்து உடனே காமராஜரை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். தி.மு.க.வினர்தான் என்னை தூக்கிக்கொண்டு போய் காங்கிரசில் போட்டனர் என்று பேட்டியும் அளித்தார்.

=============================================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Friday, 21 September 2012

பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சியா? அண்ணா ஆட்சியா?



சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது... எல்லோரும் காமராஜர் ஆட்சியமைப்போம் என்றுதான் சொல்கிறார்கள். ஏன் யாரும் அண்ணா ஆட்சியமைப்போம் என்று சொல்வதில்லை? காமராஜர்தான் பொற்கால ஆட்சியை கொடுத்தாரா? அண்ணா தரவில்லையா? என்று கேட்டார்.


தமிழ்நாட்டில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தது 1954-லிருந்து 1963 வரை 9 ஆண்டுகள். அண்ணாவோ 1967-லிருந்து 1969 வரை இரண்டு ஆண்டுகள் தான். ஆகவே, தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அண்ணாவை விட காமராஜரே..... அப்படி அதிக நாட்கள் ஆட்சியிலிருந்ததால் அவருக்கு நல்லது செய்யவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால், அண்ணாவோ மிக குறுகிய காலமே ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். அப்படியிருக்கும்போது அண்ணா சிறந்த ஆட்சியை கொடுத்தாரா? காமராஜர் சிறந்த ஆட்சியை கொடுத்தாரா என்ற கேள்வி எழவே கூடாது. ஒரு வேளை காமராஜரை விட, அண்ணா அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்திருந்தால் நிறைய செய்திருப்பாரோ என்னவோ? என்ன  நான் சொன்ன  பதில் சரிதானே.

காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பதற்கான சில காரணங்கள்.

காமராஜர் தண்ணீருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். அதனால்தான்.....
பரம்பிக்குளம்-ஆழியாறு அணை
கீழ்பவானி நீர்த்தேக்கம்
சாத்தனூர் நீர்த்தேர்க்கம்
மணிமுத்தாறு திட்டம்
வைகை அணைக்கட்டு திட்டம்

போன்றவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,
திருச்சி பாய்லர் தொழிற்சாலை,
ஆவடி ராணுவ டாங்கி தொழிற்சாலை,
நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
நீலகிரி ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி ஹிந்துஸ்தான் டெலிபிரிண்ட் தொழிற்சாலை
அம்பத்தூர், ராணிப்பேட்டை தொழிற்பேட்டை

முதலியவை காமராஜர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவைகள் தான்.




இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Monday, 19 September 2011

ஒரு விளக்கமும், ஒரு பதிலும்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-5)

என்ற பதிவில் ராவணன் என்ற நண்பரிடமிருந்து வந்த பின்னூட்டம் இதோ.....

சும்மா பிகிள் விடவேண்டாம், கருணாநிதி என்ற நபர் எப்போதும் எதற்காகவும் உண்மையாகப் போராடியது கிடையாது. கண்ணதாசனின் வனவாசம் படித்தால் இந்தத் தண்டவாள மேட்டர் எல்லாம் வண்டவாளம் ஏறும்.

ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

என்ன கொடுமை இது?

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.

அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

அதற்கான என் பதில் கீழே....


 /////நான் பிகிளெல்லாம் விடவில்லை நண்பரே...கல்லக்குடி போராட்டம் பற்றி நான் என் சொந்தக்கருத்தை பதியவில்லை. அதே நேரம், முரசொலியில் இருந்தோ, நெஞ்சுக்கு நீதியில் இருந்தோ இதை எடுக்கவில்லை. வரலாற்று பக்கங்களில் எது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அதைத்தான் எடுத்து சொல்லியுள்ளேன். உங்களுக்கு கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். அதற்காக வரலாற்றை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதே வரலாறுதான் கண்னதாசனையும் இப்படி சொல்கிறது.
கலைஞர் கைது செய்யப்பட்ட பின்...மதியம் 1:30- மணியளவில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் 41-பேர் ரயில் முன் படுத்து மறியல் செய்தனர். கூட்டத்தை கலைக்க போலிசார் தடியடி நடத்தினர். அப்படியும் தொண்டர்கள் மீண்டும் மீண்டும் வந்து தண்டவாளத்தில் படுத்தனர்.

கண்ணதாசனையும், மற்றவர்களையும் போலீசார் பலவந்தமாக தண்டவாளத்திலிருந்து வெளியே இழுத்துப்போட்டு அடித்தனர். அவரை கைது செய்து ரத்தம் சொட்டசொட்ட அவரை லாரியில் ஏற்றினர். ////



ஏர் கூலர் வசதியுடன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதி ஒரு தியாகியா?

என்ன கொடுமை இது?

////இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கலைஞரை யார் தியாகி என்றது? அந்த உண்ணாவிரதம் பெரும் கேலுக்கும், நகைப்புக்கும் உண்டானதை நான் அறிவேன். அதே நேரம் 1970-க்கு முன்பு  கலைஞரிடம் ஒரு போர்க்குணம் இருந்தது உணமை. அந்த போர்க்குணம் இன்று குடும்பம் என்ற சூழலில் சிக்கி நீர்த்துப்போய்விட்டதும் உண்மை ///


கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதும் அது டால்மியாபுரமாகவே இருந்தது.அப்போது ஒரு பயலும் தண்டவாளத்தில் இறங்கவில்லை.


////டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றுவதற்காக 1953-இல் தண்டவாளத்தில் தலை வைத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார் அல்லவா? அதற்கு 16 ஆண்டுகளுக்குப்பிறகு பலன் கிடைத்தது. 1969-இல் டால்மியாபுர ரெயில் நிலையத்தின் பெயரை "கல்லக்குடி-பழங்காநத்தம்" என்று மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

கல்லக்குடிப் போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடெங்கும் விழாக்கள் நடைபெற்றன. கல்லக்குடியில் பெரிய விழா ஒன்றுக்கு அன்பில் தர்மலிங்கம் ஏற்பாடு செய்தார்.

இதில் கலந்து கொண்ட முதல்_அமைச்சர் கருணாநிதி, 1953-இல் போராட்டம் நடைபெற்ற இடங்களை பார்வையிட்டு, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். "கல்லக்குடி-பழங்காநத்தம்" என்ற பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார் என்றும் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. ///

அண்ணா சொன்னார் என்பதால் ஏற்கவேண்டுமா? அண்ணா பொடிவைத்துப் பேசுவதில் கில்லாடி.

///அண்ணா பொடிப்போட்டு பேசுவார் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.///

 கண்ணதாசனின் வனவாசம் பற்றி அடுத்த கேள்வி- பதிலை படிக்கவும்.

==================



கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகம் குறித்து உங்கள் கருத்து என்ன? கலைஞர் இது வரை படிக்காத புத்தகம் என்று கூறியதாக ஒரு தகவலும் உலா வருகிறது, அது உண்மையா?
 கலைஞர் படித்திருப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.

1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை கோர்த்து எழுதப்பட்ட என் சுயசரிதைதான் இந்த வனவாசம் என்று கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.  பெயர்தான் வனவாசமே தவிர...உள்ளிருக்கும் எழுத்தெல்லாம்  யார் மீதாவது சேற்றை வாறி இறைப்பதாகவே இருக்கிறது. 

தனக்கு பிடிக்காத தலைவர்கள் மீது பாலியல் குற்றசாட்டுக்களை அடுக்கும் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவைக்கூட விட்டுவைக்கவில்லை. வனவாசத்தை விரக்தியின் வெளிப்படு என்றும், வயிற்றெரிச்சலின் எழுத்து வடிவம் என்றும் சொல்கிறார்கள் அதை படித்தவர்கள். 


அப்படி கண்ணதாசன் கலைஞர் மீது சேற்றை வீசுவதற்கு காரணம் இருக்கிறது.
தி.மு.க.,வில் எப்போதும் ஈ.வி.கே.சம்பத்திற்கும், கலைஞருக்கும் ஆகாது. அதே நேரம் கண்ணதாசன் சம்பத்தின் தீவிர ஆதரவாளர். சம்பத் தான் என் தலைவர் என்று பகிரங்கமாக முழங்கியவர். தி.மு.க.,வை விட்டு சம்பத் விலகி தமிழ் தேசிய கட்சியை ஆரம்பிக்க கண்ணதாசனும் ஒரு காரணம். அப்படிப்பட்டவர் எப்படி கலைஞரை பற்றி நல்லவிதமாக எழுதுவார்?. இவ்வளவு ஏன் அதே வனவாசத்தில் அண்ணாவை விட சம்பத்திற்கே செல்வாக்கு அதிகம் இருந்ததாகவும், அதனால், சம்பத்தை பார்த்து அண்ணாத்துரையே நடுங்கிக்கொண்டிருந்தார் எனவும் எழுதியுள்ளார்.

மதியழகனைப் பொதுச்செயலாளராக்குவது என்று சம்பத் எடுத்துக்கொண்ட முடிவிற்கு, அங்கே பெருத்த ஆதரவிருந்தது. கருணாநிதியும் அவரது ஆதரவாளர்களும் கலங்கிப்போய் இருந்தார்கள். எல்லோரும் சம்பத்தையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அண்ணாத்துரை சம்பத்தை தனியே அழைத்துக்கொண்டு போனார். உண்மையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். “இந்தத் தடவை மட்டும் நான் பொதுசெயலாளராக இருந்துவிடுக்கிறேன். நமக்குள்ளே தகராறு இருப்பதாக யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

தன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட ஒரு மனிதர், தன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிறார் என்ற உடனேயே சம்பத் செய்த முதற் பெருந்தவறு இதுதான். அவரைச் சுற்றி இருந்த பலபேரும் உறுதியாக நின்றபோது – அவரது இளகிய நெஞ்சம் அண்ணாத்துரையின் கண்ணீருக்குப் பணிந்துவிட்டது. பிறகு சம்பத்தே தன் ஆதரவாளர்களிடம் அண்ணாத்துரைக்கு விட்டுக் கொடுக்குமாறு கூறினார். அண்ணாத்துரை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றெல்லாம் சரடு விட்டிருக்கார் கண்ணதாசன். 

மேலும்,அண்ணா பொதுச்செயலாளரான பிறகும் கட்சியில் சம்பத்தின் கையே ஓங்கி இருந்தது. அதைத் தகர்க்க அண்ணாத்துரை ரகசியமாகத் திட்டமிட்டார் என்றும் வேலூரில் தி.மு.க.,பொதுக்குழுவிற்காக தீர்மானம் தயாரிக்கும் பணியிலிருந்த சம்பத்தை தாக்க அண்ணாவின் ஆசியுடன் கலைஞர் ஆள் ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அப்படி அண்ணாவையும் தாக்கும் காரணம், சம்பத்தை விட கலைஞருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்ததுதான்.  

கவிஞர்களுக்கு கற்பனையும், பொய்யும் தான் மூலதனம். அதனால்தான் கவிதைக்கு பொய்யழகு என்கிறார்கள். ஆனால், கண்ணதாசனின் கற்பனை வரியும் , பொய்யும் கவிதையில் மட்டுமல்லாது வனவாசம் என்ற அவரது சுயசரிதையிலும் இடம் பிடித்திருக்கிறது.

 ================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள். 
உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Wednesday, 14 September 2011

காந்தி சுடப்பட்டது ஏன்?- வைரவேல் என்னாச்சு?(அரசியல் கேள்வி பதில்கள்-பாகம்-3)

கேள்வி கேட்டவர் : ஏகலைவன்  

1. இந்துத்வாக்காரரான கோட்சே, காந்தியைச் சுட்டது ஏன்?


1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.


காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.



"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.



"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். 


இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. 


"ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.


சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.



போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 


தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.


கைது செய்யப்பட்ட கோட்சே டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை எதற்காக கொன்றேன் என்று   வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.




சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்


+++++++++++++++++



2. திருச்செந்தூர் முருகன் கோவில் தங்க வேல் காணாமல் போனது உண்மையா? அதைத் திருடியது யார்? அந்த வழக்கு என்ன ஆனது?


“திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் உதவி ஆணையர்  சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்”, என்ற செய்தி, கொலை என்றெல்லாம் தமிழிதழ்களில் வெளிவந்தன. ஆளும் அதிமுக மற்றும் எதிர் கட்சி திமுக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். உண்டியல் பணத்தை சுப்பிரமணியப்பிள்ளையே திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள்.

 கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது ஆர்.எம்.வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. பதிலுக்கு அதிமுக, திமுகவைக் குற்றஞ்சாட்டியது.

திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அதற்கு சி. ஜே. ஆர். பால், என்ற ஓய்வு பெற்ற நிதிபதி உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
விசாரனை முடித்து முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கையை கொடுத்த பால், அடுத்த நாளே அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிட்டார்.
நீதிபதி சி.ஜெ.ஆர். பால் கொடுத்த அறிக்கை சாதகமாக இல்லை என்பதால் அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், அறிக்கையின் நகல் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கலைஞர் கிடைத்ததால் நகல்களை ஏடுகள் மூலமாக கலைஞர் வெளியிட்டார்.

சட்டப் பேரவையில் அந்த அறிக்கை மீது விவாதம் நடந்தபோது, ‘அறிக்கை எவ்வாறு வெளியானது, அதற்கு யாரை பழி வாங்குவது என்றெல்லாம் அரசு நேரத்தை செலவிடாமல், அறிக்கையில் கூறியிருப்பது என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் கலைஞர்..

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 1982- பிப்ரவரி 12-இல் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு சுமார் 200 கிலோமீட்டர் ஒருவாரம்  நடைபயணம் சென்றார் கலைஞர். நடக்க நடக்க காலில் கொப்புளம் ஏற்பட்டதியும் மீறி காலில் கட்டுப்போட்டுக்கொண்டு நடந்தார். வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எரிச்சலடைந்த எம்.ஜி.ஆர். சட்டசபையை கூட்டினர். அதைப்பற்றி அவையிலே ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்து விட்டார்!” என்றார் கிண்டலாக. உடனே கலைஞர் எழுந்து, “திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்றார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதன் பிறகு அந்த கமிஷன் என்னச்சு என்றே தெரியவில்லை.

***************************
உங்களின் கேள்விக்கு நன்றி ஏகலைவன்.
இந்த இரு கேள்வியின் பதில்களே மிக நீளமாக இருப்பதால் உங்களின் மற்ற கேள்விகளுக்கான விடை விரைவில்......

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Tuesday, 13 September 2011

எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)






எமர்ஜன்சி நீடித்திருந்தால் நாடு உருப்பட்டு இருக்கும் என்று ஒரு கூற்று உண்டு....அது உண்மையா?

நிச்சயமாக இல்லை. தன்னை எதிர்ப்பவர்களை காரணமில்லாமல் கைதுசெய்ய இந்திராகாந்தி பயன்படுத்திய அடக்குமுறை ஆயுதமே எமெர்ஜென்சி. நாடு முன்னேறுவதற்காக இந்திரா எமெர்ஜென்சியை கொண்டு வந்திருந்தால் பின்னாளில் அதற்காக மன்னிப்பு கேட்டாரே அது ஏன்?.
பெருந்தலைவர் காமராஜரே நாடு போச்சு என்றுதானே சொன்னார். அந்த சமயத்தில் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு சஞ்சய்காந்தி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. இந்தியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்கிறேன் என்று எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட முதல் ஐந்து மாதங்களிலேயே சுமார் 37 லட்சம் பேர்கள் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்குமாறு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அப்படி அறைகுறையாக அல்லது அவசர அவசரமாக கருத்தடை செய்யப்பட்டதால் பலர் செத்து மடிந்தனர். அதேநேரம், அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவருமே சரியான நேரத்திற்கு வந்து ஒழுங்காக வேலை பார்த்தனர். ஸ்ட்ரைக், பந்த் என்று எதுவுமே எமெர்ஜென்சி காலத்தில் நடைபெறவில்லை. கள்ள மார்கெட் ஒழிந்தது போன்றவை ஆறுதலான விஷயங்கள். 
================


எம்ஜிஆரின் மறைவு இயற்கையானதா?...உண்மையில் நடந்தது என்ன?...விளக்க முடியுமா நண்பா!

1987- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இரவு, தனது ராமாவரம் தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். நள்ளிரவு 12:30-க்கு(அதாவது 24-ஆம் தேதி) பாத்ரூம் சென்று வந்தவர் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிக்கிறது என்றார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதை குடித்தவுடன் மயக்கமடைந்து விட்டார் எம்.ஜி.ஆர். டாக்டர்கள் வந்து சிகிட்சை அளித்தனர். ஆனாலும், சிகிட்சை பலனின்றி அதிகாலை 3 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. இதுதான் நடந்தது. 

**************************




ராஜீவ்காந்தியை உண்மையிலேயே கொன்றது யார்...???
அந்த படுகொலையை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லியிருந்தாரே விடுதலை புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன்...அதன் பிறகுமா இந்த கேள்வி...

=====================

எம்ஜியாரின் மரணம் எப்படிப்பட்டது...???
இந்தக் கேள்விக்கான பதிலை விக்கியில் இரண்டாவது கேள்விக்கான பதிலில் தெரிந்து கொள்ளவும். 

*****************

கேட்டவர்: சுரேஷ் தனபால்
 
இமானுவேல் சேகரன் குறித்து தகவல்கள் அளிக்க முடியுமா?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள். சிறுவயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்து  அவில்தாராக பணியாற்றிவர். 1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்.

1957 செப்டம்பர் 10-ஆம் தேதி  நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் பனிக்கரால்  ஒரு அமைதி கூட்டம் நடத்தப்பட்டது.அந்த  அமைதிக்கூட்டத்தில் தேவர்கள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முடிவெடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கையெழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் செப்டம்பர் 11-கொலை செய்யப்பட்டார்.
தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின்  ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கதேவர் கைதும் செய்யப்பட்டார்.பின்னர் இம்மானுவேல் சேகரனை  கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் என்ற ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆனால், அந்த அப்பாவிகள் ஐந்து பேரையும் போலீஸார் கைகளையும், கண்களையும் கட்டி குளக்கரையில் வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றனர் என்று கீழத்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து  நடந்த கலவரத்தில் 85 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இம்மானுவேல் கொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11-ஆம் தேதியை குருபூஜையாக அவர் சார்ந்த சமுதாயத்தினர் கொண்டாடுவது வழக்கம். 


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


More than a Blog Aggregator