Saturday, 25 May 2013

ராமதாசின் இன்னொரு முகம்......

நண்பர் G.GOWTHAM அவர்கள் தன் முகப்புத்தகத்தில் ராமதாஸ் பற்றி ஒரு தகவலை பதிந்திருந்தார். படித்ததும் அட....என்று சொல்லவைத்தது. நீங்களும் படிங்களேன்.....


அன்றொரு நாள்.. மக்கள் தொலைக்காட்சியின் மாலை நேர செய்திகளில் மருத்துவர் ராமதாஸ் குறித்த செய்தியில்.. அவர் பேசும் காட்சி பத்துப் பதினைந்து விநாடிகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு விநாடியும் எனக்குள் திக்திக்!

‘யோவ்.. யாருய்யா அது அய்யா விஷுவலை பதினஞ்சு விநாடிகளுக்கும் மேல இன்செர்ட் போட்டது?’ என சத்தம் போட்டபடியே தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டேன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கும் வர்த்தகப்பிரிவுக்கும் அப்போது நான்தான் தலைவர் (பிரசிடெண்ட்).

அடித்தது செல்போன். அய்யோ.. அய்யா!

அவர்தான் பேசினார். 

“எப்படி இருக்கீங்க?”
“எங்கே இருக்கீங்க?”
“பணியெல்லாம் எப்படி இருக்கு?”
- இப்படியெல்லாம் நலம் விசாரித்து, அதன்பின் சட்டென மேட்டருக்கு வருவதுதான் அவர் பாணி. ’உன் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பும் அன்பும் வேறு, ஆனால் நீ செய்த தவறுக்கு உன்னைக் கண்டிப்பது என் கடமை’ என்பதை இந்த நலம் விசாரிப்பிலேயே உணர்த்திவிடும் பாணி!

“இன்னிக்கு செய்திகள்ல..” என அவர் ஆரம்பித்தவுடனேயே தடாலெனக் குறுக்கே பாய்ந்தேன்.. 

“ஆமாங்கய்யா.. தப்பு நடந்துடுச்சு! தெரியாம செஞ்ச தப்புதான்.. புதுசா சேர்ந்த விஷுவல் எடிட்டர்தான் உங்களை இன்னும் கொஞ்சம் நேரம் காட்டணும்னு அடம் பிடிச்சு சேர்த்திருக்கார்.. உங்களை எப்படி சமாளிக்குறதுன்னு தெரியாம கவலையோட தலைல கைவச்சு உட்கார்ந்திருக்கேன்.. நீங்க என்னடான்னா கொஞ்சம்கூட யோசிக்கவே நேரம் தராம, சவுக்கை எடுத்து சுழட்டுறமாதிரி சடக்குன்னு போன் பண்ணிட்டீங்க..”

சிரித்துவிட்டார்! 

இப்படித்தான் எதையாவது அவர் சீரியஸாகப் பேசப் போக.. அப்போதெல்லாம் வெள்ளந்தியாக எதையாவது நான் பேச, அவர் சிரிக்க.. ஒருகட்டத்தில், ‘ரொம்ப இறுக்கமா இருக்கு, நம்ப கௌதமுக்கு பேசினால் ஏதாச்சும் சொல்லி சிரிக்க வச்சிடுவார்’ என அவரே மெனக்கெட்டு என்னைப் போனில் பிடித்த சம்பவங்களும் நிகழ்ந்தன!

சரி, சவுக்குக்கு வருவோம்.. ஒரு குழந்தையிடம் பேசும் அளவுக்கு மிகவும் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார் மருத்துவர் அய்யா.. 

“கவனமா கேட்டுக்கங்க.. என்ன ஆனாலும் செய்திகள்ல நடுநிலைமையை விட்டுடக்கூடாது. தேசிய அளவுல எது பெரிய கட்சி, மாநில அளவுல எது பெரிய கட்சி, யார் அரசு அதிகாரத்துல பெரியவங்க.. இப்படி எல்லாத்தையும் கவனமாப் பார்க்கணும். அந்த அடிப்படையிலதான் செய்திகளில் முக்கியத்துவம், வரிசையெல்லாம் கொடுக்கணும். பிரதமர் ஏதாச்சும் சொல்லி இருந்தா அதுதான் முதல் செய்தியா வரணும். அப்புறம் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம்... அதற்கப்புறம் தேசிய அளவுல எதிர்க்கட்சி நிலையில இருக்கவங்க.. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஏதாச்சும் அறிக்கை கொடுத்திருந்தா அதுக்குத்தான் முன்னுரிமை. அதற்கப்புறம்.. இங்கே பெரிய கட்சிகள்னா திமுக-வும் அதிமுக-வும். அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அப்புறம்தான் பாமக செய்திகளைச் சொல்லணும். அதுவும், ஒரு நாள் என் சம்பந்தப்பட்ட செய்தி வந்ததுன்னா, அதே செய்தித்தொகுப்பில் சின்னய்யா (அன்புமணி) சம்பந்தப்பட்ட செய்தியையும் காட்டக்கூடாது. ஏதாச்சும் ஒண்ணுதான் இருக்கணும். என் சம்பந்தப்பட்ட செய்திகள்ல பத்துப் பன்னிரெண்டு விநாடிக்கும் மேல என்னைக் காட்டக்கூடாது.. சின்னய்யா சம்பந்தப்பட்ட செய்திகள்ல அவர் முகத்தையும் பத்து விநாடிகளுக்கு மேல காட்டக்கூடாது. அப்புறம்.. எல்லா கட்சிகளுக்கும் கண்டிப்பா செய்திகள்ல இடம் கொடுக்கணும். ஒரே ஒரு சட்ட மன்ற உறுப்பினர் இருந்தாலும் அந்தக் கட்சியும் மக்கள் அங்கீகரிச்சு சட்டமன்றத்துக்குப் போயிருக்கும் கட்சிதான்.. அவங்க செய்திகளையும் சேர்க்கணும். நம்ம அய்யா தானேன்னு யாராச்சும் பாமக செய்திகளை அதிகமா சேர்த்துடுவாங்க, என்கிட்ட நல்ல பேரெடுக்கணும்னு தப்பா நினைச்சுக்கிட்டு என்னை ரொம்ப நேரம் செய்திகள்ல காட்டிடுவாங்க.. நீங்கதான் கவனமா இது இனிமே நடக்காம பார்த்துக்கணும்..”

- ஏற்கெனவே பலமுறை என்னிடம் இதை அவர் சொல்லியிருந்தாலும், ’எத்தனை தடவைதான் உனக்குச் சொல்றது’ என்ற எரிச்சல் ஏதுமின்றி, புதிதாகச் சொல்லும் பொறுமையோடு மீண்டும் ஒருமுறை சொன்னார்!

இது ஒரு சின்ன உதாரணம்தான். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் அரசியல் கணக்குவழக்குகளுக்கும் இடம் தராமல் ஒரு ஊடகத்தை நடத்தவேண்டும் என்ற கனவுக்கும் கவனத்துக்கும் உரியவராக இருந்தார் அய்யா ராமதாஸ். 

ஒருகாலத்தில் ’மரம் வெட்டி’யாகவே அவரைப் பார்த்த பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். ஆனால் அருகே இருந்து பார்த்தபோதுதான்.. அவரது அருமைகளை நிறைய அறிய முடிந்தது! Seeing is believing! 

வயது வித்தியாசம் பார்க்க மாட்டார். சின்னப்பையன் வந்து ஏதாவது சொன்னாலும், புதிய மாணவன் போல கவனமாகக் கேட்டுக்கொள்வார். சீர்தூக்கிப் பார்த்துச் சரியெனில் திறந்த மனதோடு ஒப்புக்கொள்வார். அதன்பின்னர் பார்க்கும் அனைவரிடமும் அந்தப் பையனைப் பற்றியே பேசிப் புகழ்வார். 

பணியாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைக்கூட, ’சம்பளம் என சொல்லக்கூடாது, ஊக்கத்தொகை என்றுதான் சொல்ல வேண்டும்’ என கறாராகச் சொல்வார். அதையும் மாதத்தின் முதல் தேதிகளிலேயே கொடுக்கச் செய்தார். ஒவ்வொரு பணியாளரையும் தனித்தனியே அறைக்கு அழைத்து, மலர்க்குவியலோடு இருக்கும் தட்டில் வைத்து சம்பளப்பணத்தைக் கொடுக்கச் செய்தார். 

அப்போதைய மக்கள் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியாக இருந்த சிவகுமார் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து வைத்து, ‘கல்யாணம் - படிப்பு - மருத்துவ உதவி என பணியாளர்கள் யார் வந்து உதவி கேட்டாலும் என்னைக்கேட்காமல் நீங்க கொடுக்கலாம். ஆனால் அதைத் திருப்பி வாங்கக்கூடாது’ என சொல்லிவைத்த மனிதாபிமானி அவர். 

எந்த விஷயத்தில் இறங்கினாலும், அதற்கு முன்னர் அதுகுறித்து குறைந்தபட்சம் பத்துப் பேரிடமாவது கருத்துக் கேட்பார். எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தமிழறிஞர் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு தன் தனி செல்பேசி எண்ணைக் கொடுத்து, அவர்கள் எந்த நேரமும் அழைக்கலாம் என்ற உரிமை கொடுத்து, அதைச் செயல்பாட்டிலும் வைத்திருப்பவர்.

பேட்டியெடுக்க அவர் வீட்டுக்குப் போகும் செய்தியாளர்களோ, தமிழறிஞர்களோ, விருந்தினர்களோ பாத்ரூம் போக வழி கேட்டால், அவர்களுக்கு முன்னால் ஓடிச்சென்று, கதவைத் திறந்து, லைட்டைப் போட்டுவிட்டு வெளியே வருவார் ஒரு விசுவாசம் மிக்க பணியாளர் போல. தான் சாப்பிடும் முன் எதிரே இருப்பவர்களைச் சாப்பிட வைப்பார்.

பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு மெனக்கெடுவதற்கும் அதிகமாகவே தன்னை வருத்திக்கொண்டு உழைத்து, மாடல் பட்ஜெட் தயாரிப்பார். இன்னும் பத்து வருடம் கழித்து தமிழகம் எப்படி இருக்கும் எனக் கவலைப்பட்டு அதற்கென இப்போதே என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அறிஞர்களை எழுதிக்கொடுக்கச் சொல்வார். தமிழ் - தமிழன் என யார் வந்தாலும் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு முதலில் சந்திப்பார்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் மருத்துவர் ராமதாஸ் என்ற மாபெரும் மனிதர் பற்றி. மக்கள் தொலைக்காட்சிப் பணியை விட்டு வெளியேறிய பின், அவரை ஓரிரு முறையே சந்தித்திருக்கிறேன். அப்போதும்கூட.. பத்திரிகையாளனின் முறுக்கோடு சற்று விலகியே நிற்கப் பழக்கப்பட்டு விட்டேன். 

அடுத்தடுத்த அரசியல் அலைக்கழிப்புக்களால் உணவையும் மருந்து மாத்திரைகளையும் நேரத்துக்குச் சாப்பிட இயலாமல் கஷ்டப்பட்டு, சரியான தூக்கமில்லாமல் அவதிப்பட்டு, மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி, இரண்டு நாட்களுக்கு முன்னர் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு, இப்போது மருத்துவமனை ஐ.சி.யு. வார்டில், குடும்பத்தினரும் பார்க்க அனுமதிக்கப்படாத நிலையில் இருக்கும் மருத்துவர் அய்யா வெகு சீக்கிரம் குணமாக என் மனமார்ந்த பிரார்த்தனைகளையும் சேர்த்துக் கொள்கிறேன்!
அதைத்தொடர்ந்து வந்த பின்னூட்டங்களுக்கு கவுதம் அவர்கள் இப்படி பதிலளித்திருந்தார்......


உள்ளதை உள்ளபடி ஒரு இம்மிகூட பொய்யின்றி எழுதியதுதான் மருத்துவர் ராமதாஸ் அய்யா பற்றி நேற்று நான் எழுதியிருந்த நிலைத்தகவல். ஒட்டியும் வெட்டியும் வரும் கருத்துக்களுக்கு ம்’ என்றோ ம்ஹூம்’ என்றோ பதில் சொல்லக்கூடாது என்ற தீர்மானத்தோடுதான் அதை எழுதியிருந்தேன். தகவலை பலர் ஷேர் செய்திருக்கிறார்கள்.. அவர்களிடமிருந்து மற்றும் பலர் ஷேர்ர்ர் செய்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு இணைப்பில் ஒருவர், ’சாதிப்பாசம் காரணமாகவே’ நான் எழுதியிருப்பதாகக் கமெண்ட் செய்தியிருக்கிறார். அதுகுறித்து கொஞ்சம் விளக்கமாகவே பேச வேண்டியிருக்கிறது.

நான் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவன் அல்ல!

நான் மட்டுமல்ல.. நான் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலகட்டத்தில், அங்கே உடன் பணியாற்றிய எந்த ஒரு உயர் பதவி அதிகாரியும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல!

அலுவலகக் கட்டிடத்தை வாடகைக்குப் பிடித்த முதல் நாளில் இருந்து அங்கே பணியாற்றும், இப்போது மிகப்பெரிய தலைமைப் பொறுப்பை அங்கே வகித்துவரும் அன்புக்குரிய தோழர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்!

வன்னிய சமுதாயத்தினர் உயரத்துக்கு வரவேண்டுமே என வாய்விட்டே பல முறை வருத்தப்பட்டிருக்கிறார். ”பாருங்க கௌதம்.. நீங்க பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம்னு வந்திருக்கும் நூறு விண்ணப்பங்களைக் காட்டுறீங்க.. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் (Single largest) மக்கள்தொகை இருக்கும் வன்னிய சாதியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு விண்ணப்பம்கூட வரலை! வன்னிய மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க” என்றும் கவலையோடு சொல்லியிருக்கிறார்.ஆனால், அன்னியர்களது வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் என்றுமே தடை போட்டதில்லை!

கட்சிக்காரர்களோ உறவுக்காரர்களோ தொலைக்காட்சி நிர்வாகத்தில் தலையிட ஒருபோதும் அவர் அனுமதித்தில்லை!

நான் உட்பட - மக்கள் தொலைக்காட்சியின் உயர் பதவிகளில் பணிபுரியச் சேர்ந்தவர்களிடம் அவர் சொல்லும் மிக முக்கியமான அறிவுறை என்ன தெரியுமா? “அய்யா சொன்னார்.. அம்மா சொன்னாங்க.. சின்னய்யா சொன்னாங்க.. சின்னம்மா சொன்னாங்க.. அப்படி இப்படின்னு யார் வந்து என்ன சொன்னாலும் உற்சாகப்படுத்தாதீங்க. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யுங்க” என்பார்.

ஒரு முறை.. மக்கள் தொலைக்காட்சிக்காக நடத்தப்பட்ட கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில், தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியின் கருத்துக்கு எதிர் கருத்தைச் சொன்ன தன் சொந்த மகளை எல்லோர் முன்னிலையிலேயே கண்டித்தார்.

கலங்கியகண்களுடன் கூட்டத்தைவிட்டு வெளியேறிய மகளைச் சமாதானப்படுத்துவதற்கு அடுத்த நாள்தான் சென்றார். ஆனால்.. ‘அவங்க இப்படி பேசினதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க.. மனசுல எதையும் வச்சுக்காதிங்க.. அவங்க ஒரு ஆர்வத்துல சொல்லிட்டாங்க.. ’ என தொலைக்காட்சி நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தவே அன்று முழுவதும் அதிகம் மெனக்கெட்டார்!

”இது மக்கள் தொலைக்காட்சி.. மக்களின் தொலைக்காட்சி.. மக்களுக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் கொடுக்கணும். நம்ம விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது” என்று என்னிடம் மட்டுமே பல நூறு தடவை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு நாள்.. அவருக்கும் திருமாவளவனுக்கும் சுத்தமாகப் பேச்சுவார்த்தை நின்றிருந்த நேரம் அது.. “இன்னிக்கு நேரலை விவாதத்துக்காக திருமாவளவனை அழைக்கப் போகிறேன்..” என்றதும், “இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்றார் எடுத்த எடுப்பில்.

“அவரை வாசல்வரை வந்து வரவேற்று அழைச்சுட்டுப் போங்க, அதேபோல் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைங்க.. ரொம்ப நேரம் காக்க வைக்காம, சீக்கிரம் நிகழ்சியை முடிச்சு அனுப்பி வையுங்க..” என்று மட்டுமே அறிவுறை சொன்னார்.

தன் சொத்தைப் பொதுச் சொத்தாகப் பார்க்கும் பெருந்தன்மை கொண்ட இன்றைய அரசியல் தலைவர்களை விரல்விட்டு எண்ணினால், முதல் மூன்று விரல்களுக்குள் நிச்சயம் இருப்பார் ராமதாஸ் அய்யா என்பதே என் திடமான கருத்து.


நன்றி: கவுதம் 
18 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. வலைப்பூவில் நிலவும் பல்வேறு வதந்திகள், தூற்றுதல்களுக்கு இடையே இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. //தன் சொத்தைப் பொதுச் சொத்தாகப் பார்க்கும் பெருந்தன்மை கொண்ட இன்றைய அரசியல் தலைவர்களை விரல்விட்டு எண்ணினால்//

  ஓ அதுனால தான் மரத்த வெட்டி மக்களுக்கு இடைஞ்சலா , மக்கள் டிவி வாழ்க ...வடிவேல் பாணியில் , இப்படி உசுபேத்தியே உடம்ப ரண களம் ஆக்கிடீங்களேடா அவ்வ்

  ReplyDelete
 4. இராமதாஸ் அவர்களை பற்றி சில கற்பனைகளை உடைதுள்ளிர்கள்

  ReplyDelete
 5. I met dr.ayyia during my education time in chennai and always advised to me to study and help to your family.
  http://Tamilarzonelinks.blogspot.com

  ReplyDelete
 6. “ராமதாசின் இன்னொரு முகம்...... “ என்று, நீங்களே உங்கள் பதிவின் தலைப்பில் சொல்லிவிட்டீர்கள். டாகடர் ராமதாசும், ''ஆமாம், நான் ஜாதி வெறியன்தான்'' என்று சொல்லிக் கொண்டார். நீங்களோ “தர்மபுரி கலவரமும் பதிவர்களும் “ என்ற தலைப்பில் ராமதாசை தூக்கிப் பிடித்த செங்கோவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ராமதாசை மகா சாதுவாக காட்டுகிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. எப்போதும் திட்டிக்கொண்டே இருந்தால் ஒரு சார்பு ஆகிவிடும். கெட்டது செய்யும்போது விமர்சனம் செய்யும் நாம்....நல்லது செய்தால் பாராட்டவும் வேண்டும்தானே அதுதான் நடுநிலை. சார் இது என் பதிவே அல்ல....முகநூலில் வேறொருவர் எழுதிய பதிவை எடுத்து போட்டிருந்தேன்.

   Delete
 7. makkal tholaikkaatchigalin nigazchiya ungal karuthukku saandru

  ReplyDelete
 8. இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி...........

  ReplyDelete
 9. sir appadi iruntha ramadass ippo yen ippadi maaritaru

  ReplyDelete
 10. Rahim sir I see your loyalty for dmk party. Now Kanimozhi needs support from PMK for the Rajya sabha seat. So, Ramadoss aiyyaa romba nallavaru vallavaru .......
  Arasiyalil ithellam shajamappa

  ReplyDelete
  Replies
  1. சார் இது என் பதிவே அல்ல....முகநூலில் வேறொருவர் எழுதிய பதிவை எடுத்து போட்டிருந்தேன். இந்த தளம் விருப்பு வெறுப்பில்லாமல் எல்லாவற்றையும் சொல்லும் தளம். கெட்டது செய்தால் திட்டும்போது, நல்ல விஷயம் இருந்தால் பாராட்டவும் செய்யனும். அதுதான் நடுநிலையாக இருக்க முடியும்.

   Delete
  2. இதில் கட்சி விசுவாசம் எங்கே உள்ளது......நேற்று என் முகநூல் பக்கத்தில் எழுதியதையும் கொஞ்சம் படித்து விடுங்கள்......
   /////////////இத்தனைக்கு பிறகும் பா.ம.க.,வுடன் தி.மு.க.,கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். தானே தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிக்கொள்வதற்கு சமம்.////////////////

   http://www.facebook.com/rahimgazali/posts/526154800778999?notif_t=like

   Delete
 11. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
  கோல்நோக்கி வாழுங் குடி.
  உரை: உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

  ReplyDelete
 12. //இது ஒரு சின்ன உதாரணம்தான். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் அரசியல் கணக்குவழக்குகளுக்கும் இடம் தராமல் ஒரு ஊடகத்தை நடத்தவேண்டும் என்ற கனவுக்கும் கவனத்துக்கும் உரியவராக இருந்தார் அய்யா ராமதாஸ்.//

  அவர் நல்லவர்தான் யாரு இல்லனு சொன்னாங்க... ஆனா கூட இருக்குற உங்கள மாதிரி ஆளுங்கனால தான் அவர இந்த சமுதாயம் கெட்டவரா பாக்குது. இத்துனை முறை சொல்லியும்... ராமதாஸ் கைது செய்ததை எத்துனை முறை மக்கள் டி.வி.யில் பரப்புறை செஞ்சு இருப்பீங்க... வழக்கமா சேனல் மாத்தும் போது தமிழன் என்ற முறையில் மக்கள் டி.வி.யை பார்ப்பதுண்டு இன்னும் சொல்லப்போனால் ஈழ விசயத்து வீடியோக்களை மக்கள் டி.வி.யில் தான் முதன் முதலில் பார்த்தேன் அதற்க்கடுத்து சொல்லுங்கண்னே அண்ணாச்சி புரோகிராம் இப்படி இன்னும் சொல்லலாம். ஆனால் அவர் கைது சம்பவித்திற்க்கு பிறகு நீங்கள் மக்கள் டி.வி என்பது தமிழர் டி.வி அல்ல அது பா.ம.க வின் டி.வி என்ற ரேஞ்சு எப்ப சேனல மாத்துனாலும் அதே நீயூஸ போட்டு போட்டு காமிச்சுக்கிட்டு இருந்தீங்களே ஏன்?

  இந்திய சுதந்திரப்போராட்டத் தியாகி என்று மராட்டியத்தில் இருந்தாலும் பெருமை கொள்ளும் பெரும்பாண்மை தமிழன் இன்று முத்துராமலிங்கம் அய்யா அவர்களை நினைப்பதில்லையே ஏன்?

  தலைவர் நல்லவர் தான் ஆனால் அத்தலைவரை முன்னிருத்தி அந்த சாதிக்காரர்கள் செய்த தவறுகளால் அவரின் சிலை சேதப்படுத்தப்படுகின்றது.

  எல்லா தலைவர்களும் அரசியலுக்கு வருவதற்க்கு காரணம் மக்கள் நலன் ஒன்றாகத்தான் இருக்கும் ஆனால் அவர்கள் பெரும் தலைவராக வளர்ந்த பிறகு சாதித் தலைவராக மாறிப்போவது ஏன்?

  அன்புமணி ராமதாஸ் சினிமாவில் சிகிரெட்டுக்கு தடை விதித்து சட்டம் போட்ட போதும், ராமதாஸ் மது ஒழிப்புக்கு குரல் குடுத்தபோதும் ஒட்டு மொத்த வன்னியர்களுகம் அவர் பின்னால் நின்றிருந்தால் இன்று சாதி அரசியல் செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏன்?

  1. பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தலித்தை முதல்வராக்குவோம் என்று சொன்ன ராமதாஸ் தலித் அல்லாதோர் சங்கம் வைத்து நடத்துவது ஏன்?
  2. ஒருகால் உங்கள் கூற்றுப்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர்கள் பணம் பறிக்கின்றனர் என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாத கூட்டணி உருவாக்கி இருக்க வேண்டுமா அல்லது தலித் அல்லாத கூட்டணி உறுவாக்கி இருக்க வேண்டுமா?
  3. தழில் நாட்டில் இருக்கும் எல்லாச் சாதியிலும் கொலைகாரன் கொல்லைக்காரன் கணவனுனக்கு துரோகமிழைப்பவள் மனைவிக்கு துரோகம் இழைப்பவன் கட்டின மனைவிpயை துன்புறுத்துபவன்... காசுக்காக மிரட்டுபவன் இருக்கின்றனர். எனில் விடுதலைத் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த அதுவும் ஒருசிலர் பணத்திற்க்கு செய்யும் காரியங்களுக்காக 18 சதவீத தலித்துகளை புறக்கனித்து எடுத்திருக்கும் முடிவு எதனால்?
  4. ஒருகால் தலித் அல்லாதோர் கூட்டமைப்பின் மூலமாக பா.ம.க ஆட்சி அமைத்தால் இங்கிருக்கும் லட்சோப லட்ச அட்டவணை சாதியினரின் நிலை என்னவாக இருக்கும்? ஈழத்தில் நடந்ததைப்போல் ஒர் இனப் படுகொலை இங்கு நடக்க வாய்ப்பு இருக்காது என்று உறுதி படக் கூற முடியுமா?

  நல்லவர் ராமதாஸ் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைத்தவர்... தொடர்ச்சியாக தி.மு.க அ.தி.மு.க கூட்டணியில் இருந்தே தோற்றுப்போனது அரசியலில் ஓரங்கட்டப்பட வேண்டிய நிலை... இறுதியாக அங்கொன்றும இங்கொன்றும் நடக்கும் விசயங்களை ஒன்று சேர்த்து ஒட்டுமொத்தமாக அட்டவணை சாதியினருக்கு எதிரான அரசியல் செய்யப் புறப்பட்டு விட்டார்.

  5. இன்று உங்களின் பின்னால் நிற்க்கும் கவுண்டர் தேவர் செட்டியார் மற்றும் இன்ன பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் மூலம் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா என்றால் ஒருகாலும் முடியாது ஏன் என்றால்... உங்களோடு இருக்கும் எந்த அமைப்புகளும் தனித்து நின்று இதுவரை ஒரு சட்டமன்றமோ நாடாளுமன்றமோ ஜெயித்ததில்லை.

  6. அடுத்து வரும் நாடாளுமன்றமும் சட்டமன்றமும் தமிழர்களுக்கு பல விசயங்களை விலங்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

  ReplyDelete
 13. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete
 14. Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

  ReplyDelete

இது உங்கள் இடம்.