Thursday 14 June 2012

ஜனாதிபதி தேர்தல் நடைமுறை இதுதான்.....


ஜூலை 19-ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட  நிலையில், இந்தத் தேர்தல் நடைமுறைகள், யாரெல்லாம் வாக்களிக்கத் தகுதி  படைத்தவர்கள்  என்பது பற்றிய விவரத்தை பார்க்கலாம்...!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.  அவர் 35 வயதை அடைந்திருக்க வேண்டும்.மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதி  பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரின் வேட்புமனுவை குறைந்தபட்சம் 50  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்து கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் 50 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழிமொழிந்து கையெழுத்திட்டு இருக்க  வேண்டும். ஒவ்வொரு எம்.பி., எம்.எல்.ஏ.வும் ஏதாவது ஒரு வேட்பாளரின்  வேட்புமனுவில்தான் கையெழுத்திட வேண்டும்.



நாடாளுமன்ற இரு அவைகளின் (மக்களவை, மாநிலங்களவை) உறுப்பினர்களும்,  மாநில சட்டசபை உறுப்பினர்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி  படைத்தவர்கள் ஆவர்.

அதாவது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 776 எம்.பி.க்களும்,  அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 எம்.எல்.ஏ.க்களும் என மொத்தம் 4,896  பேர் வாக்களிப்பார்கள். நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டடத்திலும்,  எம்.எல்.ஏ.க்கள் அவரவர் மாநில சட்டசபைகளிலும் வாக்களிப்பார்கள்.சிறையில்  இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு போட அனுமதி  அளிக்கப்படும்.வாக்குச் சீட்டு மூலமே வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்குகளின் மதிப்பு...

மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்கு  மதிப்பு வேறுபடுகிறது.ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையை,அதன் சட்டசபைத்  தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் விடையை ஆயிரத்தால் வகுத்தால்  கிடைப்பதுதான் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு.

மக்களவை (543) மாநிலங்களவை (233) உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை  776. அனைத்து மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பான  5,49,474-ஐ 776 ஆல் வகுக்க கிடைக்கும் எண் 708. இதுதான் ஒரு நாடாளுமன்ற  உறுப்பினரின் வாக்கு மதிப்பாகும்.

அதாவது, 776 என்ற எண்ணையும் 708 என்ற எண்ணையும் பெருக்கினால் கிடைக்கும்  5,49,408 என்ற எண்தான் நாடாளுமன்ற மொத்த வாக்குகளின் மதிப்பாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நாடாளுமன்ற,  சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4896 ஆகும். நாடாளுமன்ற  உறுப்பினர்கள், அனைத்துச் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு  10,98,882 ஆகும்.

இது சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பான 5,49,474 என்ற எண்ணையும்,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பான 5,49,408 என்ற எண்ணையும்  கூட்டினால் கிடைக்கும் தொகையாகும்.


5 comments:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete

  2. ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டிய தேவையான செய்தி!மிகத் தெளிவாகத் தரபட்டுள்ளது! நன்றி!

    ReplyDelete
  3. கஸாலி/செங்கோவி : ஓவ்வொரு எம்பியோட வாக்கின் மதிப்பு 708 ஓகே. அனால் சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அவர்களின் மாநிலம் சார்ந்து வேறுபடுகிறது .

    உ.ம். 1. ஆந்திர 294 MLA x 148(வாக்கு மதிப்பு = 43,512(மொத்த மாநில ச.ம.உ க்களின் வாக்கு மதிப்பு)

    2. சிக்கிம் 32 x 7 = 224
    3. தமிழ்நாடு 234 x 176 = 41184
    4, உ.பி 403 x 208 = 83824

    மாநிலத்துக்கு மாநிலம் எதன் அடிப்படையில் ச.ம.உ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடுகிறது?

    என்பது தெரிந்தால் விளக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  4. மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி
    -ருத்ரன்
    www.manavaasam.com

    ReplyDelete
  5. //பட்டிகாட்டான் Jey said...

    கஸாலி/செங்கோவி : ஓவ்வொரு எம்பியோட வாக்கின் மதிப்பு 708 ஓகே. அனால் சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு அவர்களின் மாநிலம் சார்ந்து வேறுபடுகிறது .

    உ.ம். 1. ஆந்திர 294 MLA x 148(வாக்கு மதிப்பு = 43,512(மொத்த மாநில ச.ம.உ க்களின் வாக்கு மதிப்பு)

    2. சிக்கிம் 32 x 7 = 224
    3. தமிழ்நாடு 234 x 176 = 41184
    4, உ.பி 403 x 208 = 83824

    மாநிலத்துக்கு மாநிலம் எதன் அடிப்படையில் ச.ம.உ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடுகிறது? //

    அது மாநில மக்கள்தொகையைப் பொறுத்த விஷயம் நண்பரே..உதாரணமாக:

    ஒரு மாநில மக்கள் தொகை = 50000000
    எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை = 200
    வகுத்தல் மாறிலி (Dividing Constant) = 1000

    மதிப்பு = 50000000/(200*1000) = 250.

    மாநில எம்.எல்.ஏ.மதிப்பு = 200 * 250 = 50000

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator