Wednesday 3 October 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 3




                                                             
ராஜாராமன்:  இது நாஞ்சில் சம்பத்துக்கான கேள்வி. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சினை பார்த்து 'நீ களத்தில் ஆடாதே. கேலரியில் நின்று வேடிக்கை பார்' என்று சொல்வது எப்படி இருக்குமோ அது போல தமிழக அரசியல் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க நீங்கள் இந்த தேர்தல் புறக்கணிப்பால் ஏற்படும் ஓய்வை எப்படி உணர்கிறீர்கள்?  தங்கள் பேச்சை கேட்க விரும்பும் ரசிகர்கள் பலருண்டே...

சம்பத்: தமிழ்நாட்டில் இருப்பவை எல்லாம் கட்சிகள். ம.தி.மு.க. மட்டும்தான் இயக்கம். வேறு சில கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் கூலிக்கு பேசுபவர்கள். நான் கொள்கைக்கு பேசுபவன்.  நான் அகரம் எழுதியபொழுது, ஆகாரம் அள்ளி சாப்பிட்ட பொழுதே தமிழ் என்னை சிகரத்தை நோக்கி பயணிக்க வைத்தது. அம்புலியும், ஆகாயமும் என் தாயால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பொழுதே எனக்கு தமிழும் அறிமுகம் ஆனது. பள்ளி, கல்லூரி நாட்களில் என்னுடன் கை குலுக்கியது தமிழ். நான் அரசியல், இலக்கிய மேடைகளில் அடி எடுத்து வைக்கையில் கரம் தந்தது தமிழ். நாளை நான் இறந்தபின் ஆழமாக குழி தோண்டி புதைக்கிற பொழுது, என்னுடைய சொந்தங்கள் எந்தத்தமிழில் அங்கே ஓலம் போட்டு சோக கீதத்தை உருவாக்குவார்களோ..அந்தத்தமிழின் மீட்சிக்கும், அந்தத்தமிழின மீட்புக்கும் வைகோ மட்டும்தான் களத்தில் நிற்பார். 

கூலிக்கு பேசுபவர்களோடு என்னை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ம.தி.மு.க.விற்கு இது தவக்காலம். இதை தொய்வென்று கருதவில்லை. நான் நித்தம் பல ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி தந்து வருகிறேன். ஆகவே ஆடிக்காற்றே வீசினாலும், ஐப்பசி மாத அடைமழையே கொட்டினாலும் எங்கள் கட்சி களத்தில் நிற்கும். மக்களுக்காக போராடும். ஓய்வுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.  எனவே ஓய்வுதான் எங்கள் கட்சியினரைக்கண்டு பொறாமைப்படுமே தவிர நாங்கள் ஓய்வெடுக்க உத்தேசித்ததே இல்லை. 

ராஜாராமன்: சட்டசபை தேர்தலில் வைகோ பார்வையாளராக அமர வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் இருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு ராஜபக்சேவும் ஒரு காரணம் என்று ஒரு செய்தி உலவுகிறதே? இது பற்றி தங்கள் கருத்தென்ன?  

சம்பத்: இது என்னைப்பொறுத்தவரை உண்மைதான். நாடாளுமன்றத்தில் இலங்கைத்தமிழர்களுக்காக 54 கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் வைகோ. ஒரே பிரச்சனைக்காக இத்தனை முறை கவன ஈர்ப்புகளை எவரும் கொண்டுவந்ததில்லை. ஆகவே வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க கூடாது என்று சதி செய்யப்பட்டிருக்கலாம். 

ராஜாராமன்: '10-15 சீட்டுகளுக்கு உடன்பாடு ஏற்பட்டு வைகோ எங்களுடன் வந்திருக்க வாய்ப்பு இருந்தது' என்று அ.தி.மு.க. தோழர்கள் கருதியதாக செய்தி இருந்தது..ஆனால் இறுதியில் தங்கள் கட்சியை புறக்கணித்து விட்டனரே..

சம்பத்: அ.தி.மு.க. தரப்பில் சொல்கிறார்களா? அவர்களுக்கு அரசியலே தெரியாது.... அவர்களுக்கு இண்டர்நேஷனல் சதியைப்பற்றி என்ன தெரியும்? அவர்கள் பாவம் அப்பாவிகள். அவர்கள் மீது நான் குறை சொல்ல விரும்பவில்லை. 

ராஜாராமன்: இன்றிருக்கும் கட்சிகள் திராவிட கொள்கைகளை பெரிதாக பின்பற்றவில்லை. தமிழகத்தின் பகுத்தறிவு பாதை என்பது சீரழிவில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள், மடங்கள். பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. மக்களிடையே பகுத்தறிவு கொள்கையை பரப்பும் முயற்சில் ம.தி.மு.க. எந்த அளவு தீவிரமாக இருக்கிறது? 

சம்பத்: வெகுஜன மக்கள் இந்த நாட்டில் பக்தர்களாகத்தான் உள்ளனர்.  அவர்கள் மத நம்பிக்கையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். இது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. நாங்கள் பகுத்தறிவாளர்கள்தான். அதன் அடையாளம்தான் இந்த கருப்புத்துண்டு. எம கண்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் வைகோ. கருப்புத்துண்டு அணியாமல் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று ஆரூடம் சொன்னபோது அதை நிராகரித்தவர் அவர்.   ஆனால்  பகுத்தறிவை பரப்ப ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல இது. இதெல்லாம் ஒரு சின்ன கூறுதான். நாங்கள் வெற்றிச்சரித்திரம் படைக்கையில் பகுத்தறிவு சிந்தனைகளை மேலும் மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ராஜாராமன்: முன்பெல்லாம் அரசியல் பயிற்சி வகுப்புகள் என்பவை  இன்றியமையாததாக இருந்தன. இதை இடதுசாரிகள் தொடர்ந்து செய்து வந்தனர். ஆனால் இப்போது அவற்றை நிறுத்திவிட்டனர். இம்மாதிரி பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் ம.தி.மு.க.வின் செயல்பாடுகள் என்ன?

சம்பத்: கூட்டங்களுக்கு நட்சத்திர வேல்யூ உள்ளவர்கள் பேசினால்தான் கேட்க வருகிறார்கள். இதற்கு காரணம் ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம். இம்மாயைகள் விரைவில் அகலும். என்னைவிட நன்றாக பேசுவோர் இவ்வியக்கத்தில் உள்ளனர். தொண்டர்களுக்கு மட்டுமல்ல. மாவட்ட செயலாளர்களுக்கும் இப்பயிற்சி வகுப்புகள் அவசியம். இதை தீவிரமாக செயல்படுத்த எங்கள் கட்சி ஆவன செய்யும்.
ராஜாராமன்: கணினியை உபயோகிக்கும் இளைஞர்கள் பெருகிவரும் காலமிது. அவர்களுக்கு உங்கள் செய்தி என்ன? 

சம்பத்: சவால்கள் நிறைந்த உலகமிது. அமெரிக்க நிதி நிலை சீராக இல்லை. இயற்கை பேரழிவை ஜப்பான் சந்திக்கிறது. அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் வேண்டும்.  இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். 'ஓடிக்கொண்டே இருக்கிறேன். எங்கே இருக்கிறது என் சிகரம்? தேடிக்கொண்டே இருக்கிறேன். எங்கே உள்ளது என் புதையல்? பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கே உள்ளது என் அமைதிக்கான தீவு?' என்று நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் அவர்கள் வாசித்தார்கள். அதைப்பின்பற்றி உங்கள் தேடலை துவக்குங்கள். நுகர்வு கலாச்சாரம் எனும் விலங்கால் நீங்களும், நானும் பூட்டப்பட்டு இருக்கிறோம். 

உலக, தாராள, தனியார், நவீன மயமாக்கல்கள் எனும் மாயப்பிசாசுகள் நம் அனுமதி இன்றியே நம்மை அழுத்துகின்ற சூழலில் எந்தக்கட்டத்திலும் ஒழுக்கத்தை இழந்து விடாதீர்கள். நேர்மையை காவு குடுத்து விடாதீர்கள். கொள்கை சார்ந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முடியாவிடினும், அப்பழுக்கற்றவர்களாக, ஆகாயத்தை போல் பரிசுத்தமானவர்களாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். சவால்கள் நிறைந்த உலகத்தில் உங்களை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டி வரும். அதில் இந்த தேசத்து இளைஞர்கள் வெற்றி பெற வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன். 
                                              

எனது கேள்விகளுக்கு சம்பத் அவர்களின் பதில்கள்:

கேள்வி: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் அதை இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் என்று கூறி போராட்டம் நடத்தாமல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று உங்களைப்போன்ற கட்சிகள் சொல்லி வருவதால்தான்   வட இந்திய மக்கள் மற்றும் ஊடகங்கள் இதற்கு பெரிதும் செவி சாய்ப்பதில்லை என்று கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழன் தாக்கப்பட்டால் வடக்கு ஏன் மௌனம் சாதிக்கிறது?  இந்தியா ஒரு இணைக்கப்பட்ட துணைக்கண்டம். இங்கு நடைபெற்று வருவது ஒரு கலாச்சார யுத்தம். இதை நேருவே தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்துள்ளார். இந்திய வரலாறு தெரியாதவர்கள் இப்படிப்பட்ட செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டியது நம் கடமை.

கேள்வி: சென்னை போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் IT/BPO துறையில் வேலை செய்து வருகின்றனர். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களின் வாயிலாக அரசியல் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் கணிசமான இளைஞர்கள்  குறிப்பிட்ட கட்சி சாராத நபர்களாக உள்ளனர். அவர்களை ஈர்க்க ம.தி.மு.க. என்ன திட்டம் வைத்துள்ளது?

பதில்: வைகோ மற்றும் நான் பேசும் கூட்டங்களில் கட்சி சாராத பல இளைஞர்கள் எங்கள் பேச்சை கேட்க வருகின்றனர். உடனடியாக இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை துவங்க எண்ணியுள்ளோம்.  அவர்களுடைய பெயர்,முகவரி,புகைப்படத்தை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் உறுப்பினர் அட்டையை தர உள்ளோம். அதுபோல கட்சியின் வாழ்நாள் உறுப்பினராக இளையோரை சேர்க்கவும் திட்டமுள்ளது. கல்லூரி தோறும் வாயில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா தெரியாது. ஆகவே விடுதலை உணர்வு, இன உணர்வு, கொள்கையிலே சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த தலைவர்களின் கதை போன்றவற்றை புதிய இளைஞர்களுக்கு இன்னும் அதிகமாக கொண்டு செல்ல மாவட்டம் தோறும் பயிற்சி முகாம் நடத்த திட்டம் உள்ளது. இது வெற்றி பெற்றால் இளைஞர்களை நாங்கள் தக்க வைத்து கொள்வோம் என நம்புகிறேன்.

கேள்வி:  ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதை விரும்பாத நடுநிலையானவர்களும் உண்டு. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பதன் மூலம் தற்போதைய காலகட்டத்தில் தம் கட்சியின் பலம் என்ன என்பதை சோதித்து பார்க்கும் வாய்ப்பை ஏன் இது போன்ற புறக்கணிப்புகளின் மூலம் தவற விடுகிறீர்கள்? ம.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என என்னும் மக்களுக்கு இது ஏமாற்றத்தை தருமல்லவா?

பதில்: வேறு வழியில்லை. இது பேய்க்கும், பிசாசுக்கும் நடக்கிற சண்டை. குறுக்கே பசு போய் மாட்டிக்கொள்ளக்கூடாது. ஒதுங்கி கொள்வதுதான் நல்லது.கடந்த காலத்தில் நாங்கள் சிலமுறை தனியாக களம் கண்டிருக்கிறோம்.அதில் கசப்பான படிப்பினைகளையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்தவர், அரசியலில் ஆயிரம் பிறை கண்டவர், இன்றைக்கு திருச்சி மாநகரத்தின் தட்ப வெட்பத்தை துல்லியமாக தெரிந்து ஆட்டிப்படைக்கின்ற ஆற்றலாளர் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மலர் மன்னன்.  இவர் பிள்ளைமார் வகுப்பை சார்ந்தவர். அவருடைய சொந்த பந்தங்கள் ஓட்டு போட்டாலே 30,000 வாக்குகள் வரும். ஆனால் தனியாக நின்று அவர் வாங்கிய ஓட்டுகள் வெறும் 3,000 தான். இது எங்கள் வலிமை குறைந்ததைத்தான் ஊருக்கு உணர்த்தும். கையை பொத்தி வைத்திருப்பது இப்போதைக்கு நல்லது. என்ன இருக்கிறதென்று எவருக்கும் தெரியாது. ஆகவே இது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். பதுங்கி இருக்கிறோம் பாய்வதற்காக. ஒதுங்கி இருக்கிறோம் ஓங்குவதற்காக.

இத்துடன் பேட்டி நிறைவு பெறுகிறது.
.............................................................................................


2 comments:

  1. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete
  2. malarmannan kku avvalavu selvakku tiruchi yil irunthathaaga enaku theriyavilllai

    ReplyDelete

இது உங்கள் இடம்.

More than a Blog Aggregator