Tuesday, 16 October 2012

மேல்சபை கலைக்கப்பட்ட வரலாறு




1986-ஆம் ஆண்டு அமரர் எம்.ஜி.ஆர்,தலைமையிலான அப்போதைய அண்ணா தி.மு.க-அரசு  மேல்சபை என்ற மேலவையை கலைத்தது. எதற்காக பாரம்பரியமிக்க மேலவையை கலைத்தார் எம்.ஜி.ஆர்?. அதன் பின்னே ஒரு ஒரு வலுவான அரசியல் காரணம் இருந்தது.

1986-ஆம் ஆண்டு தமிழ் நாடு மேலவை உறுப்பினராக இருந்த மூன்று பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அந்த இடத்திற்கு அ.தி.மு.க சார்பில் நடிகை வென்னிற ஆடை நிர்மலா, முன்னாள் அமைச்சரும், தற்போதைய கல்வித்தந்தையுமான ஜி.விஸ்வனாதன், எம்.ஜி.ஆரின் வக்கீல் ராகவாச்சாரி ஆகியோரை நிறுத்தி வெற்றிபெற வைத்து எம்.எல்.சி.,ஆக்கினார் எம்.ஜி.ஆர். இவர்களில் வென்னிற ஆடை நிர்மலா ஏற்கனவே இன்சால்வென்சி என்ற திவால் நோட்டீஸ் கொடுத்தவர் என்பதால் அவரை எம்.எல்.சி.,-ஆக விடக்கூடாது என்று சட்டரீதியாக வழக்கு தொடரப்பட்டது. 


வெ.ஆ. நிர்மலா எம்.எல்.சி.,-யாக தொடர வேண்டுமானால், திவால் நோட்டீஸை ரத்து செய்யவேண்டும், அப்படி ரத்து செய்வதாக இருந்தால்...ரூபாய் 10 லட்சம் கட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
வெ.ஆ. நிர்மலா எம்.எல்.சி-யாக தொடர விரும்பிய எம்.ஜி.ஆர்- தானே முன்வந்து வெ.ஆ. நிர்மலாவிற்காக ரூபாய் 10 லட்சத்தை கட்டினார். ஆனாலும், ஏற்கனவே திவாலாகிப்போயிருந்த நிர்மலாவால் எப்படி ஒரே நாளில் ரூபாய் 10 லட்சத்தை கட்டமுடிந்தது என்று மேலவையில் எதிர்கட்சிகளால் ஏற்பட்ட பெரும் அமளியை தொடர்ந்து தனது எம்.எல்.சி-பதவியை ராஜினாமா செய்தார் நிர்மலா.


இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதிய எம்.ஜி.ஆர்- மேல்சபை என்று ஒன்று இருந்தால்தானே என்று முடிவு செய்து மேலவையை கலைக்க உத்தரவிட்டார். அந்த நேரத்தில் மேல்சபை எதிர்கட்சி தலைவராக இருந்தவர் கலைஞர். (மேலவையில் கலைஞர் எப்படி வந்தார் என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஃபிளாஷ்பேக்....1980-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்...1983-இல் இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குட்டிமணி உட்பட 37 பேர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது. அதன் தொடர்சியாக சிங்களர்கள் மீது போர் தொடுத்தார் பிரபாகரன்.இந்தப்போரை காரணம் காட்டி இலங்கை ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தனர். இதனால் கோபமுற்ற கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் மத்தியஅரசு அப்பாவி இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தம் எம்.எல்.ஏ-பதவியை ராஜினாமா செய்தனர்.அதன் பிறகு சிலமாதங்களில் எம்.எல்.சியாக மேலவையில் நுழைந்தார் கலைஞர். தான் எம்.எல்.சி-யாக இருந்த காரணத்தினால் 1984-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடவில்லை கலைஞர்....1956-ஆம் ஆண்டில் முதன்முதலில் தேர்தலை சந்தித்தது தி.மு.க, அந்த தேர்தலிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை  நடந்த அத்தனை தேர்தலிலும் போட்டியிட்ட கலைஞர் 1984-இல் மட்டும் போட்டியிடவில்லை என்பது கூடுதல் தகவல்.ஓக்கே....பிளாஷ்பேக் முடிந்தது).

மேலவையை கலைக்கும் முடிவை எம்.ஜி.ஆர் அறிவித்ததும்  நான் மேலவையின் எதிர்கட்சித்தலைவராக இருப்பதால்தான் இதை கலைத்துவிட எம்.ஜி.ஆர்-முடிவெடுத்திருப்பதாக அறிகிறேன். நான் இல்லாவிட்டால் இந்த மேலவை நீடிக்கும் என்றால் நான் எனது எம்.எல்.சி-பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று உருக்கமாக அறிவித்தார் கலைஞர். அப்போது மேலவை தலைவராக இருந்த ம.பொ.சிவஞானம் அவர்களும் பாரம்பரிய மிக்க மேலவையை எம்.ஜி.ஆர் கலைக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.




ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிய எம்.ஜி.ஆர், மேலவையை கலைக்கும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, அதற்கு அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி, ஜனாதிபதி ஜெயில்சிங் ஆகியோரிடம் ஒப்புதலும் பெற்றார். அப்பொதைய மேலவையின் மொத்த இடங்கள்=63. அதில் 31 இடங்கள் காலியாக இருந்தது.

கலைக்கப்பட்ட மேலவையிலிருந்து எம்.எல்.சியாக தேர்வு செய்யப்பட்ட ஹண்டே, முகம்மது யூசுப் ஆகியோர் அப்போதைய எம்.ஜி.ஆர், அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தனர். மேலும், அண்ணா தி.மு.க-சார்பில் மதுசூதனன், ஜேப்பியார், கவிஞர் முத்துராமலிங்கம் உட்பட 14 பேர்களும், தி.மு.க சார்பில் கலைஞர், சாதிக்பாட்சா, PTR.பழனிவேல்ராஜன் உட்பட 7 பேர்களும், பதவியிழந்தனர்.

எம்.எல்.சி-பதவியிழந்தவர்கள் அமைச்சராக நீடிக்க முடியாது என்பதால்...ஹண்டே, முகம்மது யூசுப் ஆகியோரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் எம்.ஜி.ஆர்.

இவ்வளவுதான் மேலவை கலைக்கப்பட்ட வரலாறு.....எனக்கு தெரிந்த, கேள்விப்பட்ட, படித்த விஷயங்களை தொகுத்து தந்துள்ளேன்...இதில் ஏதேனும் தவறிருந்தால் அல்லது திருத்தம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்களேன்.

========================================


இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


Wednesday, 3 October 2012

ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டி - 3




                                                             
ராஜாராமன்:  இது நாஞ்சில் சம்பத்துக்கான கேள்வி. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சினை பார்த்து 'நீ களத்தில் ஆடாதே. கேலரியில் நின்று வேடிக்கை பார்' என்று சொல்வது எப்படி இருக்குமோ அது போல தமிழக அரசியல் பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்க நீங்கள் இந்த தேர்தல் புறக்கணிப்பால் ஏற்படும் ஓய்வை எப்படி உணர்கிறீர்கள்?  தங்கள் பேச்சை கேட்க விரும்பும் ரசிகர்கள் பலருண்டே...

சம்பத்: தமிழ்நாட்டில் இருப்பவை எல்லாம் கட்சிகள். ம.தி.மு.க. மட்டும்தான் இயக்கம். வேறு சில கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் கூலிக்கு பேசுபவர்கள். நான் கொள்கைக்கு பேசுபவன்.  நான் அகரம் எழுதியபொழுது, ஆகாரம் அள்ளி சாப்பிட்ட பொழுதே தமிழ் என்னை சிகரத்தை நோக்கி பயணிக்க வைத்தது. அம்புலியும், ஆகாயமும் என் தாயால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பொழுதே எனக்கு தமிழும் அறிமுகம் ஆனது. பள்ளி, கல்லூரி நாட்களில் என்னுடன் கை குலுக்கியது தமிழ். நான் அரசியல், இலக்கிய மேடைகளில் அடி எடுத்து வைக்கையில் கரம் தந்தது தமிழ். நாளை நான் இறந்தபின் ஆழமாக குழி தோண்டி புதைக்கிற பொழுது, என்னுடைய சொந்தங்கள் எந்தத்தமிழில் அங்கே ஓலம் போட்டு சோக கீதத்தை உருவாக்குவார்களோ..அந்தத்தமிழின் மீட்சிக்கும், அந்தத்தமிழின மீட்புக்கும் வைகோ மட்டும்தான் களத்தில் நிற்பார். 

கூலிக்கு பேசுபவர்களோடு என்னை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ம.தி.மு.க.விற்கு இது தவக்காலம். இதை தொய்வென்று கருதவில்லை. நான் நித்தம் பல ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் பேட்டி தந்து வருகிறேன். ஆகவே ஆடிக்காற்றே வீசினாலும், ஐப்பசி மாத அடைமழையே கொட்டினாலும் எங்கள் கட்சி களத்தில் நிற்கும். மக்களுக்காக போராடும். ஓய்வுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.  எனவே ஓய்வுதான் எங்கள் கட்சியினரைக்கண்டு பொறாமைப்படுமே தவிர நாங்கள் ஓய்வெடுக்க உத்தேசித்ததே இல்லை. 

ராஜாராமன்: சட்டசபை தேர்தலில் வைகோ பார்வையாளராக அமர வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் இருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு ராஜபக்சேவும் ஒரு காரணம் என்று ஒரு செய்தி உலவுகிறதே? இது பற்றி தங்கள் கருத்தென்ன?  

சம்பத்: இது என்னைப்பொறுத்தவரை உண்மைதான். நாடாளுமன்றத்தில் இலங்கைத்தமிழர்களுக்காக 54 கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் வைகோ. ஒரே பிரச்சனைக்காக இத்தனை முறை கவன ஈர்ப்புகளை எவரும் கொண்டுவந்ததில்லை. ஆகவே வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க கூடாது என்று சதி செய்யப்பட்டிருக்கலாம். 

ராஜாராமன்: '10-15 சீட்டுகளுக்கு உடன்பாடு ஏற்பட்டு வைகோ எங்களுடன் வந்திருக்க வாய்ப்பு இருந்தது' என்று அ.தி.மு.க. தோழர்கள் கருதியதாக செய்தி இருந்தது..ஆனால் இறுதியில் தங்கள் கட்சியை புறக்கணித்து விட்டனரே..

சம்பத்: அ.தி.மு.க. தரப்பில் சொல்கிறார்களா? அவர்களுக்கு அரசியலே தெரியாது.... அவர்களுக்கு இண்டர்நேஷனல் சதியைப்பற்றி என்ன தெரியும்? அவர்கள் பாவம் அப்பாவிகள். அவர்கள் மீது நான் குறை சொல்ல விரும்பவில்லை. 

ராஜாராமன்: இன்றிருக்கும் கட்சிகள் திராவிட கொள்கைகளை பெரிதாக பின்பற்றவில்லை. தமிழகத்தின் பகுத்தறிவு பாதை என்பது சீரழிவில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சாமியார்கள், மடங்கள். பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. மக்களிடையே பகுத்தறிவு கொள்கையை பரப்பும் முயற்சில் ம.தி.மு.க. எந்த அளவு தீவிரமாக இருக்கிறது? 

சம்பத்: வெகுஜன மக்கள் இந்த நாட்டில் பக்தர்களாகத்தான் உள்ளனர்.  அவர்கள் மத நம்பிக்கையில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். இது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. நாங்கள் பகுத்தறிவாளர்கள்தான். அதன் அடையாளம்தான் இந்த கருப்புத்துண்டு. எம கண்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் வைகோ. கருப்புத்துண்டு அணியாமல் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று ஆரூடம் சொன்னபோது அதை நிராகரித்தவர் அவர்.   ஆனால்  பகுத்தறிவை பரப்ப ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல இது. இதெல்லாம் ஒரு சின்ன கூறுதான். நாங்கள் வெற்றிச்சரித்திரம் படைக்கையில் பகுத்தறிவு சிந்தனைகளை மேலும் மக்களுக்கு கொண்டு செல்வோம்.

ராஜாராமன்: முன்பெல்லாம் அரசியல் பயிற்சி வகுப்புகள் என்பவை  இன்றியமையாததாக இருந்தன. இதை இடதுசாரிகள் தொடர்ந்து செய்து வந்தனர். ஆனால் இப்போது அவற்றை நிறுத்திவிட்டனர். இம்மாதிரி பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் ம.தி.மு.க.வின் செயல்பாடுகள் என்ன?

சம்பத்: கூட்டங்களுக்கு நட்சத்திர வேல்யூ உள்ளவர்கள் பேசினால்தான் கேட்க வருகிறார்கள். இதற்கு காரணம் ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம். இம்மாயைகள் விரைவில் அகலும். என்னைவிட நன்றாக பேசுவோர் இவ்வியக்கத்தில் உள்ளனர். தொண்டர்களுக்கு மட்டுமல்ல. மாவட்ட செயலாளர்களுக்கும் இப்பயிற்சி வகுப்புகள் அவசியம். இதை தீவிரமாக செயல்படுத்த எங்கள் கட்சி ஆவன செய்யும்.
ராஜாராமன்: கணினியை உபயோகிக்கும் இளைஞர்கள் பெருகிவரும் காலமிது. அவர்களுக்கு உங்கள் செய்தி என்ன? 

சம்பத்: சவால்கள் நிறைந்த உலகமிது. அமெரிக்க நிதி நிலை சீராக இல்லை. இயற்கை பேரழிவை ஜப்பான் சந்திக்கிறது. அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் வேண்டும்.  இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். 'ஓடிக்கொண்டே இருக்கிறேன். எங்கே இருக்கிறது என் சிகரம்? தேடிக்கொண்டே இருக்கிறேன். எங்கே உள்ளது என் புதையல்? பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கே உள்ளது என் அமைதிக்கான தீவு?' என்று நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் அவர்கள் வாசித்தார்கள். அதைப்பின்பற்றி உங்கள் தேடலை துவக்குங்கள். நுகர்வு கலாச்சாரம் எனும் விலங்கால் நீங்களும், நானும் பூட்டப்பட்டு இருக்கிறோம். 

உலக, தாராள, தனியார், நவீன மயமாக்கல்கள் எனும் மாயப்பிசாசுகள் நம் அனுமதி இன்றியே நம்மை அழுத்துகின்ற சூழலில் எந்தக்கட்டத்திலும் ஒழுக்கத்தை இழந்து விடாதீர்கள். நேர்மையை காவு குடுத்து விடாதீர்கள். கொள்கை சார்ந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முடியாவிடினும், அப்பழுக்கற்றவர்களாக, ஆகாயத்தை போல் பரிசுத்தமானவர்களாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். சவால்கள் நிறைந்த உலகத்தில் உங்களை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டி வரும். அதில் இந்த தேசத்து இளைஞர்கள் வெற்றி பெற வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன். 
                                              

எனது கேள்விகளுக்கு சம்பத் அவர்களின் பதில்கள்:

கேள்வி: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் அதை இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் என்று கூறி போராட்டம் நடத்தாமல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று உங்களைப்போன்ற கட்சிகள் சொல்லி வருவதால்தான்   வட இந்திய மக்கள் மற்றும் ஊடகங்கள் இதற்கு பெரிதும் செவி சாய்ப்பதில்லை என்று கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழன் தாக்கப்பட்டால் வடக்கு ஏன் மௌனம் சாதிக்கிறது?  இந்தியா ஒரு இணைக்கப்பட்ட துணைக்கண்டம். இங்கு நடைபெற்று வருவது ஒரு கலாச்சார யுத்தம். இதை நேருவே தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் பதிவு செய்துள்ளார். இந்திய வரலாறு தெரியாதவர்கள் இப்படிப்பட்ட செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டியது நம் கடமை.

கேள்வி: சென்னை போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் IT/BPO துறையில் வேலை செய்து வருகின்றனர். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களின் வாயிலாக அரசியல் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அவர்களில் கணிசமான இளைஞர்கள்  குறிப்பிட்ட கட்சி சாராத நபர்களாக உள்ளனர். அவர்களை ஈர்க்க ம.தி.மு.க. என்ன திட்டம் வைத்துள்ளது?

பதில்: வைகோ மற்றும் நான் பேசும் கூட்டங்களில் கட்சி சாராத பல இளைஞர்கள் எங்கள் பேச்சை கேட்க வருகின்றனர். உடனடியாக இளைஞர்களை சேர்க்கும் திட்டத்தை துவங்க எண்ணியுள்ளோம்.  அவர்களுடைய பெயர்,முகவரி,புகைப்படத்தை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் உறுப்பினர் அட்டையை தர உள்ளோம். அதுபோல கட்சியின் வாழ்நாள் உறுப்பினராக இளையோரை சேர்க்கவும் திட்டமுள்ளது. கல்லூரி தோறும் வாயில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களுக்கு பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா தெரியாது. ஆகவே விடுதலை உணர்வு, இன உணர்வு, கொள்கையிலே சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த தலைவர்களின் கதை போன்றவற்றை புதிய இளைஞர்களுக்கு இன்னும் அதிகமாக கொண்டு செல்ல மாவட்டம் தோறும் பயிற்சி முகாம் நடத்த திட்டம் உள்ளது. இது வெற்றி பெற்றால் இளைஞர்களை நாங்கள் தக்க வைத்து கொள்வோம் என நம்புகிறேன்.

கேள்வி:  ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதை விரும்பாத நடுநிலையானவர்களும் உண்டு. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பதன் மூலம் தற்போதைய காலகட்டத்தில் தம் கட்சியின் பலம் என்ன என்பதை சோதித்து பார்க்கும் வாய்ப்பை ஏன் இது போன்ற புறக்கணிப்புகளின் மூலம் தவற விடுகிறீர்கள்? ம.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என என்னும் மக்களுக்கு இது ஏமாற்றத்தை தருமல்லவா?

பதில்: வேறு வழியில்லை. இது பேய்க்கும், பிசாசுக்கும் நடக்கிற சண்டை. குறுக்கே பசு போய் மாட்டிக்கொள்ளக்கூடாது. ஒதுங்கி கொள்வதுதான் நல்லது.கடந்த காலத்தில் நாங்கள் சிலமுறை தனியாக களம் கண்டிருக்கிறோம்.அதில் கசப்பான படிப்பினைகளையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்தவர், அரசியலில் ஆயிரம் பிறை கண்டவர், இன்றைக்கு திருச்சி மாநகரத்தின் தட்ப வெட்பத்தை துல்லியமாக தெரிந்து ஆட்டிப்படைக்கின்ற ஆற்றலாளர் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மலர் மன்னன்.  இவர் பிள்ளைமார் வகுப்பை சார்ந்தவர். அவருடைய சொந்த பந்தங்கள் ஓட்டு போட்டாலே 30,000 வாக்குகள் வரும். ஆனால் தனியாக நின்று அவர் வாங்கிய ஓட்டுகள் வெறும் 3,000 தான். இது எங்கள் வலிமை குறைந்ததைத்தான் ஊருக்கு உணர்த்தும். கையை பொத்தி வைத்திருப்பது இப்போதைக்கு நல்லது. என்ன இருக்கிறதென்று எவருக்கும் தெரியாது. ஆகவே இது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான். பதுங்கி இருக்கிறோம் பாய்வதற்காக. ஒதுங்கி இருக்கிறோம் ஓங்குவதற்காக.

இத்துடன் பேட்டி நிறைவு பெறுகிறது.
.............................................................................................


Tuesday, 2 October 2012

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின் வாக்குமூலம்




1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.


காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.



"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.



"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். 


இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. 


"ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.


சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.



போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 


தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.


கைது செய்யப்பட்ட கோட்சே டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியை எதற்காக கொன்றேன் என்று   வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தை அப்படியே தருகிறேன் படியுங்கள்.

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.




சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்



குறிப்பு: இது இனையத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஒருவேளை இது தவறான செய்தியாகக்கூட இருக்கலாம். தவறிருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். 


============================================================

இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எனக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறேன். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com
இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.  உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள். உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com


More than a Blog Aggregator