எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை விட ஜெயலலிதாவை மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசாக ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியை கொடுத்து அத்ற்கான பதிலை ஒரு பதிவாக வெளியிடுங்களேன் என்று நண்பர்
செங்கோவி கேட்டிருந்தார். இந்த கேள்வி செங்கோவி மனதில் மட்டுமல்ல.... எல்லோர் மனதிலும் இருக்கும். அதற்கான விடைதேடும் முயற்சியே இந்த பதிவு.
எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியாது. நீண்ட விளக்கம் கொடுத்தால் தான் விளங்கும்.
எம்.ஜி.ஆரை திருமணம் செய்துகொண்ட ஜானகி அம்மையார் சினிமாவிலிருந்து விலகி, எந்த ஒரு அரசியல் ஆர்வமும் இல்லாமல், நல்ல குடும்பத்தலைவியாக மட்டுமே விளங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு சிறிது காலம் முதல்வராக இருந்ததை தவிர....
ஆனால், ஜெயலலிதாவின் வளர்ச்சி அப்படிப்பட்டதல்ல....
1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வி.,தான்...பின்னாளில் அது தனக்கே பெரும் ஆப்பாக முடியும் என்று தெரியாமலே....
அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார்.
சத்திணவு திட்டத்தின் மீது ஜெ.,க்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செ., யான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றிவந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்ப்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெ.,க்கு வழங்கினர்.
அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.
ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொறுமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மேலும் பொறுமலை கிளப்பியது. கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது ஜெ.,க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் ஜெ.,தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார்( ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்., என்று குற்றம் சாட்டியதால் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட எஸ்.டி.எஸ்., பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இடம் பிடித்தது வரலாறு).
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெ.,யை பற்றி எம்.ஜி.ஆரிடம் புகார் செய்ய பயந்தார்கள் மற்றவர்கள். ஆனாலும், அவரின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது. ஜெ.,யை ஓரங்கட்ட நாள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அந்த நாளும் வந்தது. ஆம்...எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றியது. சிறுநீரகக்கோளாறு, பக்கவாதம் என்று அடுத்தடுத்து நோய் தாக்கியது. இப்படி எம்.ஜி.ஆரின் உடல் நிலை சிக்கலான சமயத்தில் அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ.
மேல் சிகிட்சைக்காக அமெரிக்கா அழைத்துசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.,
அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் ராஜீவ்காந்தி. அப்போதே சட்டசபையயும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனும். அதற்கான அனுமதியையும் எம்.ஜி.ஆரிடம் பெற்றனர்.
அதன்பின் ஜெயலலிதாவை ஓரங்கட்டினர். அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இப்படியே இருந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க அனுப்பிவிடுவார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ என்னவோ உடனே சுதாரித்துக்கொண்டார் .அழையா விருந்தாளியாக, தனியாளாக பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். இதைத்தான் அதிமுக தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது… . நாடாளுமன்றத்துடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நோயுடன் போராடிக்கிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார். ஆகவே , பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பப்போவது யார்? மக்களைத் திரட்டுவது எப்படி? நாம் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா. அதேநேரம், அதிமுக தலைவர்கள் ‘ஜெயலலிதா பிரசாரம் செய்யப்போவதில்லை.’என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர். அந்த செய்தியையும் படித்தார்.
இப்படி செய்தி கொடுத்தது யார் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது ஜெயாவால்...இதை ஆர்.எம்.வீ.,தான் கொடுத்திருக்க வேண்டுமென தீர்மானித்தார். அவர் அப்படி நினைக்கவும் காரணம் இருந்தது.
உண்மையில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது பெயருக்குத்தான் நிழல் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார் மற்றபடி, சகலமும் ஆர்.எம். வீரப்பன் வசமே இருந்தன. சகலமும் என்றால் கட்சி நிர்வாகம் தொடங்கி ஆட்சி, தேர்தல், கூட்டணி, வேட்பாளர்கள், நிதி, பிரசாரம் அனைத்துமே அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பிரச்சாரத்துக்கு யாரை, எங்கே அனுப்பலாம் என்பதை ஆர்.எம்.வீதான் முடிவு செய்தார். மொத்தத்தில் முதல்வரே ஆர்.எம்.வீ.,தான்.
அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சினிமா காலத்தில் இருந்தே அவர்கள் இருவருக்குமே ஒத்துவராது. அரசியலிலும் அது நீடித்துக் கொண்டிருந்தது.ஏற்கனவே ஒரு முறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீ., போகாததால் கட்சியின் கொ.ப.செ., என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெ. அதன்பிறகு ஆர்.எம்.வீ-க்கு ஜெயா மேலிருந்த கடுப்பு இன்னும் அதிகரித்தது
எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயா அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர்.
தங்களுடைய அதிருப்தியை எம்.ஜி.ஆரிடம் நேரடியாகச் சொல்லமுடியவில்லை. தவித்தனர். தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். தற்போது கிடைத்துவிட்டது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது. ஜெயலலிதாவிற்கு. அதற்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது. ஓரங்கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியே ஜெயலலிதா பிரசாரம் செய்யமாட்டார் என்கிற அந்தப் பத்திரிகை செய்தியாக வெளிப்பட்டது.
தன்னை வலுக்கட்டாயமாக அமுக்கப்பார்க்கிறார்கள் என்றதும் திமிறிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜெ. 3 டிசம்பர் 1984 அன்று ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்குப் பிரசாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த திமுகவின் தவறான பிரசாரம் பற்றிப் பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளிச் சுற்றுப்பயணம் அது.
எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்யாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.
இந்த வெற்றிக்கு சில காரணங்கள் இருந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிட்சையில் இருக்கும்போது அவர் நடப்பாதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர் அதிமுக., தலைவர்கள். கூடவே சமீபத்தில் படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டது. ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற பிரச்சார கோசங்கள் முதன்மை பெற்றன.
தன்னைச் சுற்றிப் பலமான எதிர்ப்புவலை பின்னப்படுகிறது என்று தெரிந்ததும் ஆவேசப்பட்டு எழுந்து, பிரசாரம் செய்து, அந்த வலையை அறுத்தெறிந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவாலும், அதிமுக தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரம் அது. கொண்டாடி தீர்த்தனர் ஜெ ஆதரவாளர்கள். ஆம் அ.தி.மு.க., வில் அப்போது ஜெயலலிதாவிற்கென்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது.
சிகிட்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றார்.அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர், தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், அதனால் என்னை முதல்வராக்க்குங்கள் என்றும் பிரதமர் ராஜீவிற்கு தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதி அதை சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதா கொடுத்து விட்டதாக மக்கள் குரல் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. இது போதாதா ஜெயின் அரசியல் எதிரிகளுக்கு....எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அந்த விஷயத்தை பக்குவமாக அவரின் காதிற்கு கொண்டுசென்றனர் அவரின் அரசியல் எதிரிகள்.
இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் எம்.ஜி.ஆர். உடனே, இனி ஜெயலலிதாவிடம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டார். தொடர்ந்து அவரை கட்சியிலிருந்தும் நீக்குவது என்பது அவரின் திட்டம்.
அதன்பிறகு ஒரு நாள் ஜெயாவை கட்சிலிருந்து நீக்க முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்,. அப்போது அங்கிருந்த அமைச்சர் ராஜாராம் இப்போது நீக்கினால் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிடும். உங்களுக்கு பூர்ண குணமானபின் இந்த முடிவை எடுக்கலாம் என்று அவரின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டார். அப்போதைய அமைச்சர் திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவை நீக்கக்கூடாது என்று பலமாக வாதாடினார். அவரின் ஆலோசனை படியே ஜெ.,யை நீக்கும் முடிவு தற்காலிகமாய் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர். மரணமடைந்து விட்டார்.
அந்த சமயத்தில் இறுதிவரை எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த ஜெ எல்லோராலும் கவனிக்கப்பட்டார். . எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வ்லுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது.அதனால் அனுதாபமும் பெற்றார்.
எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்
தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ்செழியன் அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதலமைச்சராக்காப்போவதாக அவர் அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.
நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ரூட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்( சாத்தூரார்), அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அண்ணா.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக ஜெயாவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீ., போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயாவிற்க்கு ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஜெ ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேரும் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக்காட்டப்பட்ட கூத்தும் நடந்தது. ஜெ ஆதரவாளர்கள் திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் அந்த வேலையை பார்த்துக்கொண்டனர்.
பின் ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கவர்னர் குரான முன் நிறுத்தி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆர்.எம்.வீ.,.அதன் படியே ஜானகியை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர் குரானா.3 வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறும் கட்டளையிட்டார்.
1988 ஜனவரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் ஜெயலலிதா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மைனாரிட்டி ஜானகி அரசாகவே அது இருந்தது. 3 வாரத்திற்குள் வேறு மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டுமே.....
62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும்...ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்று முடிவு செய்த ஆர்.எம்.வீ., நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவு பட்ட அதிமுக., வை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார் ராஜீவ் இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவிடம் ஆதரவை கோரினார். ஜெயலலிதாவிடமும் அதே பதிலை சொன்னவர். சட்டசபையில் ஜானகியை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார்.
வேறுவழியின்றி தி.மு.க.,வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீ, ராசாராம், மாதவன் போன்றோர் இறங்கினர். அ.தி.மு.க.,வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை என்று தி.மு.க., செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர்( அப்படி சொன்னது எத்தனை பெரிய தவறென்று இப்போது உணர்ந்திருப்பார் கலைஞர். அவர் மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் ஜானகி அரசு காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்).
ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி-ஜெயா அணிகளுக்கிடையே பெரும் கலவரம் வெடித்தது. மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன. பல எம்.எல்.ஏ.,க்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால்...கட்சி கட்டுப்பாட்டை மீறிய 33 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார்.
ஆனால், சட்டஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது பரிதாபமான க்ளைமேக்ஸ்.
அதன் பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலில் இருந்தது.
இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா அணியில் செயல்பட்ட நாவலர், திருநாவுக்கரசு, பண்ரூட்டி, அரங்கநாயகம் போன்ற தலைவர்கள்(?) ஜெ.,க்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜெயாவிடம் கணக்கு கேட்ட இவர்கள் கட்சியிலிருந்து இல்லை...இல்லை...ஜெ அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெ.,க்கு அதிகாரமில்லை என்று கூறிய இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர்.
அப்போதுதான் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று அறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகமான நாவலரை உதிர்ந்த மயிர் என்ற உலகப்புகழ் பெற்ற வார்த்தையால் வசை படினார் ஜெ.,
நால்வர் அணி சிறிது காலத்துக்குள்ளாகவே மீண்டும் ஜெயாவுடன் இணைந்தது.
1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு... ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதாவுடன் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால் மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன் தனித்து போட்டியிட்டது.
இந்த தேர்தல் முடிவில்...தி.மு.க., மீண்டும் அதாவது 13 வருட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதே நேரம் 198 இட்ங்களில் போட்டியிட்ட ஜெ., அணிக்கு 27 இடங்களும், 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும் கிடைத்தது. (நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தான் அந்த ஒருவர்).
ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகியம்மாள் 22,647 வாக்குகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 33,191 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அங்கு ஜெயாவை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளர் நடிகை வென்னிற ஆடை நிர்மலா வெறும் 1512 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருந்தார்.
இதில் ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9%) வாக்குகளும், ஜெயலலிதா அணிக்கு மொத்தம் 50,54,138 (21%) வாக்குகளும் கிடைத்திருந்தது.
இந்த தேர்த்ல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது. அரசியல் வானில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவும் பிரகாசித்தார்.
இந்த பதிவைப்பற்றிய சில விளக்கங்கள்:
நண்பர் செங்கோவியிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வந்ததும் இதற்கான பதிலில் ஒரு முப்பது சதவீதம் என் நினைவில் இருந்தது. அந்த 30% பதில்களே இதற்கு போதும்தான். ஆனாலும், மேலோட்டமாக சொல்வதைவிட இன்னும் கொஞ்சம் ஆழமாக சொன்னால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன்பிறகே ஒரு தீவிர தேடலில் இறங்கினேன்.இனையத்தில் ஜெயா பற்றிய தகவல்களும்,சம்பவங்களும் கொட்டிக்கிடந்தது. சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்புதானே வரலாறு. அந்த பொக்கிஷங்களை எடுத்து என் நினைவில் இருந்த விஷயங்களையும் ஆங்காங்கே சேர்த்து என் பாணியில் நேர்த்தியாக தொகுத்தளித்தேன். அவ்வளவே என் பணி.ஆம்... நான் இந்த கட்டுரையின் தொகுப்பாளர் மட்டுமே. இந்த தேடலின் மூலம் எனக்கு தெரியாத விஷயங்கள் நிறையவே தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு கேள்வியை கொடுத்த நண்பர் செங்கோவிக்கு நன்றி.....
இன்னொரு முக்கியமான விஷயம்....இதில் சசிகலா பற்றி ஒன்றுமே இல்லையே என்று கேட்பவர்களுக்கு....ஜெயலலிதா அண்ணா தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் ஆன வரலாறுதான் நமக்கு முக்கியமே தவிர...ஜெயின் வரலாறு அல்ல....என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
=========================================================
இதைப்போல உங்களிடமும் நிறைய கேள்விகள்& சந்தேகங்கள் இருக்கலாம். அதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன். முடிந்த வரை தீர்த்துவைக்கிறோம். அனுப்பும்போது உங்களின் பெயர் மற்றும் வலைப்பதிவின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
உங்களின் கேள்விகளை தனி மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்புங்கள். பின்னூட்டப்பகுதியில் அந்தந்த பதிவிற்கான கருத்துக்களை மட்டுமே தெரிவியுங்கள்.
உங்களின் கேள்விகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
arasiyalvaadhi@gmail.com